
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதுவும் குடிக்க பணம் தரவில்லை என்றால் பெற்றோர் என்று கூட பாராமல் கொலை செய்வது உள்ளிட்ட சம்பவம் நடைபெறுகின்றன. இந்நிலையில் சரியாக படிக்காததை கண்டித்த தாயை மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள கீழக்குப்பம் வேலூர் கிராமத்தில் வசித்து வருபவர் குணசேகரன்(45). லாரி ஓட்டுநர். இவரது மனைவி மகேஸ்வரி (40). இந்த தம்பதிக்கு 16 வயதில் ஒரு மகளும், 14 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
தீபாவளி பண்டிகையின்போது குணசேகர் தனது மனைவி மகேஸ்வரிக்கு புடவையை வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் அதனை கட்ட மறுத்ததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபம் அடைந்த மகேஸ்வரி வயலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அப்போது பன்னீர்செல்வம் என்பவரின் விவசாய நிலத்தில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக திரு நாவலுார் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மகேஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது தனது 14 வயது மகனே தாயை கொன்றது தெரிந்தது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில்: சரியாக படிக்காமல் எந்நேரமும் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்ததால் கண்டித்து வந்துள்ளார். மேலும் தந்தையிடம் தகராறு செய்ததால் ஆத்திரமடைந்த மகன் தாய் மகேஸ்வரி வயலுக்கு செல்வதை அறிந்து மகன் அங்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து மகேஸ்வரியை அடித்து கொன்றுள்ளார். இதையடுத்து, 14 வயது சிறுவனை போலீசார் கைது செய்து கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.