
வேலூர்,
ஆறாவது ஊதியக் குழுவின் முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் நேற்று மண்டல அளவிலான உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர்.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் மண்டல அளவிலான உண்ணாவிரத போராட்டம் வேலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று நடைப்பெற்றது
இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மாவட்ட தலைவர்கள் பாஸ்கரன் (வேலூர்), ரவிச்சந்திரன் (திருவள்ளூர்), விநாயகம் (காஞ்சீபுரம்), முகமதுமைனுதீன் (திருவண்ணாமலை) ஆகியோர் தலைமை வகித்தனர். வேலூர் மாவட்ட செயலாளர் அருண்குமார் வரவேற்றார்.
இதில், மாநில பொதுச்செயலாளர் சேகர் கலந்து கொண்டு தொடக்கவுரையாற்றினார்.
“ஆறாவது ஊதியக் குழுவின் முரண்பாடுகளை களையவேண்டும்.
ஏழாவது ஊதியக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்,
2004–ஆம் ஆண்டு முதல் 2006–ஆம் ஆண்டு வரை பணியில் சேர்ந்த அனைவருக்கும் பணியில் சேர்ந்தநாள் முதல் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
ஒரு தேர்வு மையத்தில் 400 மாணவ – மாணவிகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
மேல்நிலை பொதுத்தேர்வு முழுவதும் முடிந்த பின்னரே விடைத்தாள் திருத்தும் பணியை தொடங்க வேண்டும்,
ஒரு முதன்மை தேர்வாளருக்கு அதிகபட்சம் நான்கு உதவித் தேர்வாளர்களை மட்டுமே நியமிக்க வேண்டும்.
விடைத்தாள் திருத்தும்போது உள்ளூர் ஆசிரியர்களுக்கு தினப்படியாக ரூ.300, வெளியூர் ஆசிரியர்களுக்கு ரூ.400 வழங்க வேண்டும்” உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில துணைத்தலைவர் அண்ணாதுரை போராட்டத்தை முடித்து வைத்தார்.
முடிவில் வேலூர் மாவட்ட பொருளாளர் த.மோகனரங்கம் நன்றி தெரிவித்தார்.