போராட்டக் களமான பேராசியர் அன்பழகன் வளாகம்: 17 ஆசிரியர்கள் மயக்கம்!

By Manikanda Prabu  |  First Published Sep 29, 2023, 1:15 PM IST

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 17 பேர் மயக்கமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் அமைந்துள்ள பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் (டிபிஐ வளாகம்) பள்ளிக்கல்வி துறையின் தலைமை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த வளாகத்தில், ஆசிரியர் சங்கங்கள் சார்பில் அவ்வப்போது போராட்டங்கள் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் மொத்தம் 4 ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. ‘சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1ஆம் தேதி பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் அடிப்படை ஊதியத்தில் முதல் தரப்புக்கு ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் 20,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதேபோல், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பிலும் போராட்டம்  நடைபெற்று வருகிறது. மேலும், டெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மீண்டும் போட்டித் தேர்வு நடத்தக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கர்நாடகா செய்வது நியாயமல்ல: துரைமுருகன்!

இந்த ஆசிரியர் சங்கங்களிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 17 பேர் மயக்கமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை டிபிஐ வளாகத்தில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் 17 பேர் மயக்கமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவில் பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். கோரிக்கையை நிறைவேற்றும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

click me!