ஆசிரியர் கண்ணன் தற்கொலைக்கு திமுக அரசு தான் காரணம்.. இனியாவது.. அன்புமணி பரபரப்பு புகார்.!

Published : Jan 14, 2026, 06:43 PM IST
mk stalin

சுருக்கம்

பணி நிலைப்பு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர் கண்ணன் தற்கொலை செய்துகொண்டார். இந்த உயிரிழப்புக்கு திமுக அரசே காரணம் என குற்றம்சாட்டியுள்ள அன்புமணி உயிரிழந்த ஆசிரியர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவியும் அரசு வேலையும் வழங்க வேண்டும்.

தற்கொலை செய்து கொண்ட ஆசிரியர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க திமுக அரசு முன்வர வேண்டும் என அன்புமணி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். அதாவது பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நடத்தி வந்த போராட்டத்தின் போது நஞ்சு குடித்த பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் மருத்துவம் பயனளிக்காமல் இன்று மாலை உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், பகுதிநேர ஆசிரியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பணி நிலைப்புக் கோரிக்கையை வலியுறுத்தி 13 ஆண்டுகளாக போராடி வரும் அவர்கள், கடந்த 8ஆம் தேதி முதல், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற திமுக அரசு மறுப்பது மட்டுமின்றி, அவர்களுக்கு எதிராக அடக்குமுறையையும் கட்டவிழ்த்து விட்டு வருகிறது.

சென்னையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் வானகரத்தில் உள்ள திருமண அரங்கத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், அடக்குமுறைகளைக் கண்டித்தும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் கண்ணன் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மருத்துவம் பயனளிக்காமல் இன்று மாலை காலமானார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால், அதை நிறைவேற்றவில்லை. கடந்த ஐந்தாண்டுகளாக அவர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தியும் கூட , அவர்களின் கோரிக்கைகளை ஏற்பதற்கு பதிலாக அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே ஆசிரியர் கண்ணன் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஆசிரியர் கண்ணன் உயிரிழப்புக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். இனியாவது திமுக அரசு மனசாட்சிக்கு அஞ்சி பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். தற்கொலை செய்து கொண்ட ஆசிரியர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க திமுக அரசு முன்வர வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Palani Temple: அடேங்கப்பா.. பழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை இத்தனை கோடியா? தங்கம் எவ்வளவு தெரியுமா?
திமுக அரசுக்கு எதிராக போராடிய ஆசிரியர் தற்கொ*லை.. நெஞ்சை உருக்கும் சோகம்!