டெட் முடிவுகள், முதுநிலை ஆசிரியர் தேர்ச்சி பட்டியலை உடனடியாக வெளியிட அன்புமணி கோரிக்கை

Published : Jan 14, 2026, 04:14 PM IST
anbumani

சுருக்கம்

தமிழகத்தில் TET தேர்வுகள் நடத்தப்பட்டு 2 மாதங்கள் ஆகும் நிலையில், அதன் முடிவுகள் வெளியிடப்படவில்லை. மிகவும் முக்கியமான தருணத்தில் நடத்தப்பட்ட இந்த தேர்வுகளின் முடிவுகளை வெளியிடுவதில் தேர்வு வாரியம் தேவையற்ற காலதாமதம் செய்வதாக அன்புமணி குற்றச்சாட்டு.

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு தகுதி பெறுவதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11&ஆம் தேதி வெளியிடப்பட்டு, நவம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாள் தேர்வை 92,412 பேரும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கான இரண்டாம் தாள் தேர்வை 3 லட்சத்து 31,923 பேரும் எழுதினர். தேர்வு வாரியம் நினைத்தால் இந்தத் தேர்வுகளின் முடிவுகளை ஒரு மாதத்தில் வெளியிட்டு விட முடியும். ஆனால், தேர்வு நடந்து இரு மாதங்கள் முடிவடையும் நிலையில் இதுவரை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.

வழக்கமாக எழுத்துத் தேர்வுகள் நடத்தப்படும் போது, அதில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைகள் தேர்வு நாளிலேயே வெளியிடப்பட்டு, அதன் மீதான ஆட்சேபனைகள் ஒரு வாரத்தில் பெறப்பட வேண்டும். ஆனால், இந்த முறை தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு 10 நாள்களுக்குப் பிறகு நவம்பர் 25&ஆம் தேதி தான் உத்தேச விடைகள் வெளியிடப்பட்டன. அவற்றின் மீதான ஆட்சேபனைகள் திசம்பர் 3&ஆம் தேதிக்குள் பெறப்பட்டன. அதன்பின்னர் இரு வாரங்களில் தேர்வு முடிவுகளை வெளியிட்டிருக்க முடியும். ஆனால், தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதற்குக் காரணம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அலட்சியம் தான்.

அதேபோல், அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 1966 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை கடந்த ஆண்டு ஜூலை 10&ஆம் தேதி வெளியிடப்பட்டு, அக்டோபர் 12&ஆம் தேதி போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டன. அடுத்த 3 நாள்களில் அக்டோபர் 15&ஆம் தேதி உத்தேச விடைகள் வெளியிடப்பட்டு, அதன் மீதான ஆட்சேபனைகள் அக்டோபர் 26&ஆம் தேதி வரை பெறப்பட்டன. அதைத் தொடர்ந்து சரியாக ஒரு மாதத்தில், நவம்பர் 27&ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 14 பாடங்களுக்கு ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ள நிலையில், அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புகளை 10 நாள்களில் முடித்து, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியலை வெளியிட்டிருக்க முடியும். ஆனால், அதை செய்வதற்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் தவறிவிட்டது.

கடந்த காலங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு ஆகியவற்றை நடத்தி முடிவுகளை வெளியிடுவதற்கு இதை விட தாமதம் ஆகியிருக்கிறது என்பது உண்மை தான். ஆனால், இப்போது இந்த இரு தேர்வுகளும் நடத்தப்பட்டிருக்கும் சூழல் முந்தைய சூழல்களில் இருந்து மாறுபட்டது.

கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் அடுத்த இரு ஆண்டுகளில் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும்; தகுதித்தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும் என கடந்த செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனால், 2011&ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களில் பல்லாயிரக்கணக்கானோர் இந்தத் தேர்வை எழுதியுள்ளனர். உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி 4 மாதங்கள் நிறைவடைந்து விட்டன. மீதமுள்ள 20 மாதங்களில் எத்தனை முறை தகுதித் தேர்வு நடத்தப்படும் என்பது தெரியவில்லை. அதனால், இந்தத் தேர்விலேயே நாம் வெற்றி பெற்று விட மாட்டோமா? என்ற மன உளைச்சலில் பல்லாயிரம் ஆசிரியர்கள் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். அவர்களின் மன உளைச்சலைப் போக்குவதற்காகவாவது தகுதித் தேர்வு முடிவுகள் உடனடியாக வெளியிடப்பட வேண்டும்.

மேலும் கடந்த முறை நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் பங்கேற்க முடியாத ஆசிரியர்கள், ஜனவரி மாதத்திற்குள் ஒரு முறையாவது சிறப்புத் தகுதித் தேர்வு நடத்தப்படும்; அதில் நாம் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்று எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கின்றனர். ஏற்கனவே நடத்தப்பட்ட தகுதித் தேர்வின் முடிவுகள் வெளியிடப் படாமல் அடுத்தத் தகுதித் தேர்வை நடத்த முடியாது. அதனால், பல்லாயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள்.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான முடிவுகளைப் பொறுத்தவரை, 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிடப்படுவதற்கு முன்பாக பணி நியமன ஆணைகளை பெற வேண்டும் என்று எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்கள் விரும்புகின்றனர். தேர்தல் அறிவிக்கை வெளியிடப்படுவதற்கு இன்னும் 5 வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதற்குள் நியமன ஆணைகளை பெறாவிட்டால், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தங்களின் நிலை என்ன ஆகுமோ? என்ற கவலை அவர்களை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது.

மிகவும் நெருக்கடியான சூழலில் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் காட்டக்கூடாது. ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளையும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலையும் ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும். தேர்தல் அறிவிக்கை வெளியிடப்படுவதற்கு முன்பாக சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வையும் ஒருமுறை நடத்தி முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வடமாநில பெண்கள் படிக்காத அடிமைகள்.. திராவிட மாடல் பெண்கள் மெத்த படித்த மேதாவிகள்..! சீண்டிய தயாநிதி மாறன்..!
சங்கி குழு பொங்கலில் பராசக்தி டீம்..! ஜனநாயகன் மட்டும் பிளாக்..! திமுகவை போட்டு பொளக்கும் மாணிக்கம் தாகூர்