
கன்னியாகுமரி
கன்னியாகுமரியில், போலீஸ் முதல் முதலமைச்சர் செல் வரை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை ஆட்சியரகத்தில் ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றார்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் இராமன்புதூரைச் சேர்ந்தவர் லாரன்ஸ் (57). ஆசிரியரான இவர் தற்போது தம்மத்துக்கோணம் ஞானம் நகரில் வசித்து வருகிறார்.
நேற்று இவர் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக வந்திருந்தார். மனு கொடுத்துவிட்டு வெளியே வந்தார் லாரன்ஸ்.
பிறகு ஆட்சியர் அலுவலகத்தின் பிரதான வாசலின் அருகே சென்று தனது சட்டைப்பையில் இருந்த பாட்டிலை எடுத்து அதிலிருந்த விஷத்தை குடித்துத் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கூறினார்.
உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளர்கள் ஓடிச்சென்று, அவரிடம் இருந்து விஷ பாட்டிலை பிடுங்கினர். காவலாளர்கள் செல்வதற்குள் லாரன்ஸ், விஷத்தை குடித்துவிட்டதால் அவர் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தால் நேற்று ஆட்சியர் அலுவலகமே பரபரப்புடன் காணப்பட்டது. இதனையடுத்து அங்கு காவலாளர்கள் குவிக்கப்பட்டனர்.
விஷம் குடித்த ஆசிரியர் லாரன்சிடம் காவலாளர்கள் விசாரணை நடத்தினர். அதில், "நான் 1989-ஆம் ஆண்டு முதல் நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணியாற்றி வந்தேன்.
இந்த நிலையில் பள்ளியில் ஏற்பட்ட சில பிரச்சனைகளாலும், பண நெருக்கடியின் காரணமாகவும் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் விருப்ப ஓய்வு பெற எழுதிக் கொடுத்தேன். 15 மாதங்கள் ஆகியும் இதுவரை எனக்கு எந்த பணபலனும் கிடைக்கவில்லை.
இதற்கு பள்ளிக்கூட தலைமை ஆசிரியரும், செயலாளரும்தான் காரணம். இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தேன். எனக்கு ஓய்வூதியம் மற்றும் பணபலன்களை பெற்றுத்தர சில அதிகாரிகளுக்கு பணமும் கொடுத்தேன்.
ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமிலும் மனு அளித்தேன். இதுவரை அதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதற்கிடையே எனக்கு கடன் கொடுத்தவர்கள் எனது வீட்டை எழுதி வாங்கிக் கொண்டதோடு, இன்னமும் பல இலட்ச ரூபாய் தரவேண்டும் என்று கூறி கந்து வட்டி கேட்டு மிரட்டுகிறார்கள்.
இது தொடர்பாக எனது மனைவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறார். காவல் நிலையம், முதலமைச்சரின் தனிப்பிரிவு ஆகியவற்றுக்கும் புகார் கொடுத்திருக்கிறோம்.
ஆனால், எங்கும் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவேதான், நான் தற்கொலை முடிவை எடுத்தேன்" என்று அவர் கூறினார்.
இதுகுறித்து உரிய விசாரணையை ஆட்சியர் எடுப்பார் என்று அவரிடம் காவலாளர்கள் தெரிவித்தனர்.