
தலைமை ஆசிரியர் டார்ச்சரால், வகுப்பறையில் ஆசிரியை தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இச்சம்பவம் சின்னசேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ஏர்வாய்பட்டிணம் காட்டுக் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சித்திரைசெல்வன். இவரது மனைவி மங்கை (38). சின்னசேலம் அருகே உள்ள கடத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறார். இதே பள்ளியில் தலைமை ஆசிரியையாக புஷ்பதெரஸ் என்பவரும் வேலை பார்க்கிறார்.
கடந்த சில நாட்களாக தலைமை ஆசிரியை புஷ்பதெரஸ், ஆசிரியை மங்கைக்கு அதிக வேலை பளு கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், அவருக்கு பல்வேறு வழிகளில் டார்ச்சரும் செய்ததாகவும், அவரை அடிக்கடி பலர் முன்னிலையில் திட்டியதாகவும் தெரிகிறது.
இது தொடர்பாக ஆசிரியை மங்கை, கல்வி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தொடர்ந்து, ஆசிரியை மங்கைக்கு தலைமை ஆசிரியை மேலும் கூடுதல் பணிச்சுமை கொடுத்துள்ளார். இதனால் ஆசிரியை மங்கை மன உளைச்சல் அடைந்தார்.
இந்நிலையில்,நேற்று காலை மங்கை வழக்கம்போல் பள்ளிக்கு சென்று, மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். மாலையில் பள்ளி முடிந்தவுடன் மாணவர்கள் வீட்டுக்கு திரும்பினர். அப்போது வகுப்பறையில் தனியாக இருந்த ஆசிரியை மங்கை திடீரென மயங்கி விழுந்தார். வெகுநேரமாகியும் வகுப்பறையில் இருந்து மங்கை வெளியே வரவில்லை.
இதனால், சந்தேகமடைந்த மற்ற ஆசிரியைகள் அங்கு சென்று பார்த்தபோது, மங்கை மயங்கி கிடந்ததை கண்டு திடுக்கிட்டனர்.. அருகில் தூக்கமாத்திரை பாட்டில் கிடந்தது. மேலும் அங்குள்ள கரும்பலகையில், எனது தற்கொலைக்கு காரணம் தலைமை ஆசிரியைதான் என்று ஆசிரியை மங்கை எழுதியிருந்தார். இதைப்பார்த்த ஆசிரியைகள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக மயங்கி கிடந்த மங்கையை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அதில், ஆசிரியை மங்கை தூக்க மாத்திரை சாப்பிட்டது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தகவலறிந்து சின்ன சேலம் போலீசார், மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர். மேலும், உதவி தொடக்க கல்வி அலுவலர் சாந்தப்பன் மற்றும் அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று ஆசிரியை மங்கையிடம் சம்பவம் குறித்து விசாரித்தனர்.
வகுப்பறையில் ஆசிரியை தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.