
நீலகிரி
நீலகிரியில் வருடா வருடம் நடத்தப்படும் தேயிலை சுற்றுலா விழா இந்தாண்டு ஜனவரியில் கிடையாது என்றும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இந்த விழா நடத்தப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், "நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் தேயிலை, சுற்றுலா விழா நடத்தப்பட்டு வருகிறது.
மாவட்ட நிர்வாகம், தேயிலை வாரியம், சுற்றுலாத் துறை, பிற துறைகள் இணைந்து இந்த விழா நடத்தப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்துக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளிடையே நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் தேயிலையை பிரபலப்படுத்தும் நோக்கிலும், தமிழகத்தின் கலை, கலாசாரத்தை பிரபலப்படுத்தும் நோக்கிலும், கூடுதலான சுற்றுலாப் பயணிகளை இம்மாவட்டத்திற்கு அதிகளவில் ஈர்க்கும் வகையிலும் சுற்றுலாவை மேம்படுத்தவும் தேயிலை சுற்றுலா விழா நடத்தப்பட்டு வருகிறது.
நீலகிரி தேயிலை சுற்றுலா விழா கடந்த ஆண்டுகளில் டிசம்பர் அல்லது ஜனவரி மாதங்களில் கொண்டாடப்பட்டு வந்தது.
ஆனால், இந்தாண்டில் நீலகிரி மாவட்ட தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கம், தேயிலை தொழில் சார்ந்த அமைப்புகளின் ஆலோசனையின்படி இந்த விழாவை சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தரும் கோடைக்காலமான ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடத்தலாம் என மாவட்ட நிர்வாகம் தீர்மானித்துள்ளது" என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.