
நாமக்கல்
நாமக்கல்லில் அரசு மணல் குவாரியிலிருந்து மாட்டு வண்டி மூலம் குறைந்த விலைக்கு வாங்கப்படும் மணல் வெளிச்சந்தையில் அதிக விலைக்கு முறைகேடாக விற்கப்படுவதை தடுக்க கோரி தமிழக கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கம் வரும் 12-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தமிழக கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்க அலுவலக வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வேலுபிள்ளை தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் நாகராஜன் வரவேற்றார்.
இந்தக் கூட்டத்தில், "தமிழகத்தில் ஒட்டுமொத்த மணல் குவாரிகள் மூடப்பட்ட சூழ்நிலையில் கட்டுமான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வீடு கட்டும் உரிமையாளர்களும், மணலை ஆதாரமாகக் கொண்டு செயல்படும் சிறுதொழில் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டம், பாலப்பட்டியில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு மாட்டு வண்டிகள் மூலம் மட்டுமே மணல் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாட்டு வண்டி மணல் எடுப்பதற்கு நாள் ஒன்றுக்கு ஒரு முறை மட்டுமே அனுமதி. மேலும் மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
ஒருமுறை காவிரியில் இருந்து மணல் எடுத்து வரும் மாட்டு வண்டி ஒன்றுக்கு பொதுப்பணித் துறை மூலம் ரூ. 63 கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கு சுமார் 600 முதல் 700 மாட்டு வண்டிகள் இங்கிருந்து மணலை எடுத்துச் செல்கின்றன.
மணலை எடுத்துச் செல்லும் மாட்டு வண்டி உரிமையாளர்கள் ரூ. 4 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரை விற்பனை செய்வதாகவும், எனவே மாநில அரசு மாட்டு வண்டி மணலுக்கான விலையை நிர்ணயம் வேண்டும் எனவும், முறைகேடாக மணலை விற்பனை செய்வதைத் தடுக்கக் கோரி வரும் 12-ஆம் தேதி பரமத்தி வேலூர் அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் தமிழக கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், கட்டடத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.