
நாமக்கல்
பல்வேறு சமுதாயத்தினருக்கு உரிய கோயிலில் மற்ற சமூதாயத்தினரை ஒதுக்கிவிட்டு ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டுமே கோயில் திருவிழாவை நடத்தி முயற்சிப்பதால் சாதிய மோதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று அஞ்சி அதனைத் தடுத்து நிறுத்த கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், தும்மங்குறிச்சியைச் சேர்ந்த கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு.ஆசியா மரியத்தை சந்தித்தனர்.
அவர்கள் ஆட்சியரிடம் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில், "நாமக்கல் மாவட்டம், தும்மங்குறிச்சி கிராமத்தில் பல்வேறு சமுதாய மக்கள் வழிபாடு செய்து வரும் சின்ன, பெரிய காமாட்சி அம்மன், பெரியசாமி கோயில்கள் உள்ளன.
பல்வேறு சமுதாயத்தினர் சார்பில் இந்தக் கோயில்களில் ஆண்டுதோறும் தை மாதம் 1-ஆம் தேதி திருவிழா நடத்துவது வழக்கம்.
இந்த நிலையில், இந்த ஆண்டு ஒட்டுமொத்த சமுதாய மக்களையும் ஒதுக்கிவிட்டு ஒரு சமுதாய மக்கள் மட்டும் திருவிழா நடத்த முயற்சி செய்து வருகின்றனர். இதனால், சாதி மோதல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளன.
எனவே, இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சாதிய மோதல்கள் ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த மனுவில் அவர்கள் தெரிவித்து இருந்தனர்.
அந்த மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், இதுகுறித்து உடனே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.