
நாகப்பட்டினம்
நாகப்பட்டினத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் இறந்த ஆதரவற்றோர், அடையாளம் தெரியாத 58 உடலகளை தனது சொந்த செலவில் நல்லடக்கம் செய்தவருக்கு "மனிதரில் புனிதர்' விருது வழங்கி சர்வதேச ரோட்டரி சங்கம் கெளரவித்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் பி.ஐயாசாமி. மயிலாடுதுறை கிங்ஸ் ரோட்டரி சங்கச் செயலராக உள்ள இவர், மயிலாடுதுறை பகுதிகளில் இறக்கும் ஆதரவற்றோர், அடையாளம் தெரியாதவர்கள் என காவலாளர்களால் தெரிவிக்கப்படும் நபர்களின் உடல்களை காவலாளர்கள் மற்றும் மருத்துவர்கள் ஒத்துழைப்புடன் தனது சொந்த செலவில் நல்லடக்கம் செய்து வருகிறார்.
இவ்வாறு, கடந்த மூன்று ஆண்டுகளில் 58 உடல்களை நல்லடக்கம் செய்துள்ள இவரின் சேவையைப் பாராட்டி, சர்வதேச ரோட்டரி சங்கம் சார்பில் கடந்த 6-ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற ரோட்டரி சங்க மாநாட்டில் பி. ஐயாசாமிக்கு "மனிதரில் புனிதர்' எனும் விருது வழங்கப்பட்டது.
இதனையொட்டி, இவருக்கு ரோட்டரி சங்க உதவி ஆளுநர் ஆர்எம்எஸ். சஜ்ஜல், மயிலாடுதுறை கிங்ஸ் ரோட்டரி சங்கத் தலைவர் எம்.ஏ. அக்பர், பொருளாளர் வெங்கட்ராஜூலு, நாம் அமைப்பின் தலைவர் ஏசிடி. செந்தில்குமார் உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.