
தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளில் தீபாவளியையொட்டி 2 நாட்களில் மட்டும் 243 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் நடத்தப்பட்டுவந்த 500 மதுக்கடைகளை மூடிய பின்னர் இப்போது சுமார் 6,200 கடைகள் இயங்கி வருகின்றன. சாதாரண நாட்களில் இந்தக் கடைகள் மூலம் ஒரு நாளைக்கு 60 கோடி ரூபாய் முதல் 90 கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெறும்.
பண்டிகை காலங்களில் மது விற்பனை அமோகமாக இருக்கும், கடந்த ஆண்டு தீபாவளியையொட்டி 2 நாட்களில் 215 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானது. இந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய நாள் 108 கோடி ரூபாய்க்கும், தீபாவளியன்று 135 கோடி ரூபாய்க்கும் மது விற்பனையாகியுள்ளது.
2 நாட்களிலும் சேர்த்து மொத்தம் 243 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.