
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் பட்டாசு வெடித்தபோது தீப்பொறி பறந்து விழுந்ததில் ஏராளமான குடிசை வீடுகள், கடைகள், குடோன்கள், பைக்குகள் எரிந்து நாசமானது.24 பேர் காயமடைந்தனர்.
திருவொற்றியூர் குப்பத்தை சேர்ந்தவர் ரஞ்சித் (46). மீனவர். இந்த பகுதியில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரஞ்சித், கடந்த 2 நாட்களுக்கு முன் ஆரம்பாக்கத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றிருந்தார்.
இந்நிலையில், நேற்று மதியம் திருவொற்றியூர் குப்பத்தில் உள்ள சிறுவர்கள் பட்டாசு வெடித்தனர். அப்போது ஒரு பட்டாசில் இருந்து தீப்பொறி பறந்து ரஞ்சித்தின் குடிசை வீட்டில் விழுந்தது. அதிலிருந்து கிளம்பிய தீப்பொறியால் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. மேலும், மளமளவென அருகில் உள்ள 6 குடிசைகளுக்கும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
தகவலறிந்து திருவொற்றியூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள், 6 குடிசை வீடுகளும் முழுவதுமாக எரிந்து சாம்பலாகிவிட்டன. வீடுகளில் இருந்த பீரோ, கட்டில், டி.வி. உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகிவிட்டன.
புதுவண்ணாரப்பேட்டை பிரின்ஸ் குடியிருப்பை சேர்ந்தவர் ராஜ். இவர், தனது பைக்கை குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம். நேற்று முன்தினம் இரவு சுமார் 10.30 மணியளவில் திடீரென ஒரு ராக்கெட் பட்டாசு, பறந்து வந்து ராஜியின் பைக் மீது விழுந்து வெடித்தது.
இதில் பைக் தீ பிடித்து எரிந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் அருகில் இருந்த மற்றொரு பைக் மீதும் தீ பற்றியது. சுமார் அரை மணி நேரம் போராடி பொதுமக்கள் தீயை அணைத்தனர்.
அதேபோல், கொருக்குப்பேட்டை பாரதிநகரில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அதிலிருந்து ஏற்பட்ட தீப்பொறி அங்கிருந்த குப்பம்மாள் (60) என்பவரின் குடிசை வீட்டின் மீது விழுந்தது. இதில் குப்பம்மாளின் வீடு சாம்பலானது.
தண்டையார்பேட்டை திலகர் நகரில் அங்காளம்மன் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு எங்கிருந்தோ பறந்து வந்த ராக்கெட் பட்டாசு இந்த கோயில் முன்பு போடப்பட்ட பந்தலில் விழுந்து வெடித்தது. இதில் பந்தல் தீப்பற்றி எரிந்தது. உடனே அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால், தீயை அணைக்க முடியவில்லை. பின்னர் தண்டையார்பேட்டை தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.
அடையாறு, எல்லையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அழகேசன் (55). சாஸ்திரி நகர் முதலாவது மெயின் ரோட்டில் காயலான் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அழகேசன், தீபாவளி பண்டிகையையொட்டி கடையைப் பூட்டிவிட்டு சென்றார். இரவு 8 மணியளவில் காயலான் கடையில் ராக்கெட் பட்டாசு ஒன்று பறந்துவந்து விழுந்தது.
இதில் கடையில் இருந்த மரப்பொருள், காகிதம் மற்றும் இரும்பு கழிவு பொருட்கள் தீப்பிடித்து எரிந்தன. தகவலறிந்து, திருவான்மியூர், துரைப்பாக்கம் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வண்டிகளில் வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.
பேசின்பிரிட்ஜ் அருகே பவுடர் மில்ஸ் சாலையில் பிளாஸ்டிக் குடோன் உள்ளது. இதன் உரிமையாளர் புஷ்பராஜ் (50). சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கழிவு பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி சேமித்து, தரம் பிரித்து பிளாஸ்டிக் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வருகிறார்.
நேற்று முன்தினம் தீபாவளி என்பதால் ஊழியர்களுக்கு விடுமுறை விடப்பட்டது. குடோனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் நேற்று முன்தினம் இரவு பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது ஒரு பட்டாசு குடோனில் விழுந்தது.
இதில் அங்கிருந்த பிளாஸ்டிக் பொருட்களில் பட்டு மளமளவென தீப்பிடித்தது. இதில் குடோனில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. புகை மண்டலம் சூழ்ந்ததால் அப்பகுதி மக்களுக்கு கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
தகவல் கிடைத்ததும் பேசின்பிரிட்ஜ் போலீசார் மற்றும் பேசின்பிரிட்ஜ், வண்ணாரப்பேட்டை, வேப்பேரி பகுதியில் இருந்து தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைத்தன.
தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், பட்டாசு வெடித்த விபத்தில் காயமடைந்த திருவண்ணாமலையை சேர்ந்த கார்மேகம் (7), சென்னை சிட்லப்பாக்கத்தை சேர்ந்த நாகலட்சுமி (48), தி.நகரை சேர்ந்த ஐப்பன் (17), டி.பி.சத்திரத்தை சேர்ந்த விக்னேஷ் (13), அரக்கோணத்தை சேர்ந்த நிரஞ்சனி (3) ஆகியோர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெளிநோயாளிகளாக சென்னை எண்ணூரை சேர்ந்த பிரபா (22), ராயப்பேட்டையை சேர்ந்த கிறிஸ்டோபர் (8), நெய்வேலியை சேர்ந்த காவியா (5) உள்பட 19 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.