
இந்தியாவுக்கு சுற்றுலாவுக்கு ஏராளமான வெளிநாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர். இதில் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை காண்பது மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள மாமல்லபுரம் கல் சிற்பங்களை கண்டு ரசித்து செல்வார்கள்.
இதையடுத்து, சுற்றுலா தலமாக புதுச்சேரிக்கு பயணம் செய்கின்றனர். புதுச்சேரி என்றதும் அந்த காலத்தில் பவேந்தர் பாரதிதாசன் பிறந்த ஊர் எனவும், கண்ணாடி மாளிகை, அழகான கடற்கரை உள்ளிட்டவை அடங்கிய சுற்றுலா நகரம் என கூறுவார்கள்.
ஆனால், இன்றைய நிலை, மது பிரியர்களுக்கு உரிய இடமாக புதுச்சேரி மாறிவிட்டது. சென்னை உள்பட புதுச்சேரிக்கு அருகில் உள்ள மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் விடுமுறை நாட்களில் கூட்டம் கூட்டமாக புதுச்சேரி சென்று enjoy செய்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. அதில், மாநில நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை மார்ச் 31ம் தேதி மூட வேண்டும் என அறிவித்தது.
இதையொட்டி புதுச்சேரி முள்ளோடை பகுதியில் பாருடன் அமைந்து இருந்த மதுபான கடைக்கு நேற்று பூட்டு போடப்பட்டது.
இந்த கடைக்கு சாதாரண நாட்களிலேயே ஏராளமான குடிமகன்கள் வருவார்கள். விடுமுறை நாட்களில் சொல்லவே வேண்டாம். இதனால், கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார், வந்து அவர்களை சரி செய்து அனுப்புவார்கள்.
அதே நேரத்தில், இந்த மதுபான கடையின் அருகே ஆட்டோ ஸ்டாண்டு அமைந்துள்ளது. வழக்கமாக இங்கு வரும் குடிமகன்களுக்கு போதை தலைக்கேறினால், இங்குள்ள ஒரு ஏதேனும் ஒரு ஆட்டோவில் வீடு போய் சேருவார்கள்.
மறுநாள் வந்து, இங்கே நிறுத்தப்பட்ட தங்களது வாகனத்தை கொண்டு செல்வார்கள். அதுவரை அந்த வாகனத்தை, ஆட்டோ டிரைவர்கள் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். இதனால், குடிமகன்களுக்கும் சந்தோஷம். ஆட்டோ டிரைவர்களுக்கும் வருமானம் இருந்து வந்தது.
இதனால், ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இந்த மதுபான கடைக்கு இன்று காலை வந்தனர். ஆனால், இந்த கடைக்கு பூட்டு போட்டதால், மது அருந்த முடியாமல், மண்டையை பீய்த்து கொண்டனர்.
இதையடுத்து, வேறு பகுதிகளில் உள்ள மதுபான கடைகளுக்கு புறப்பட்டு சென்றனர். எந்நேரமும் பரபரப்பாக காணப்பட்ட இடம், இன்று மயானமாக உள்ளது. இங்கு வரும் குடிமகன்கள் “இன்றைய ஞாயித்துகிழமை நாசமா போச்சி” என புலம்பியபடி சென்று கொண்டு இருக்கின்றனர்.