
விருதுநகரில் பெண்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி சாராயக் கடையை மூடி பூட்டுப் போட்டதை உடைத்து டாஸ்மாக் ஊழியர்கள் திறக்க முயற்சித்தபோது அங்குவந்த காவலாளர்கள் அனுமதி மறுத்து திருப்பி அனுப்பினர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பாலையம்பட்டி வேல்முருகன்காலனியில் புதிதாக சாராயக் கடை திறக்கப்பட்ட நாளில் இருந்து அந்தப் பகுதி பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சாலை மறியல், முற்றுகை என பல போராட்டங்களை நடத்தியும், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்தும் முறையிட்டதால் சுமார் 20 நாள்கள் மட்டும் இயங்கிய அந்த சாராயக் கடை மூடப்பட்டது.
கடை ஊழியர்கள் கடையினை பூட்டிவிட்டுச் சென்ற நிலையில் அந்தப் பகுதி பெண்களும் தனியாக ஒரு பூட்டுபோட்டு வைத்திருந்தனர்.
இந்த நிலையில் அந்தக் சாராயக் கடையை மீண்டும் திறக்க டாஸ்மாக் அதிகாரிகள் உத்தரவிட்டதால், அதன்படி கடையைத் திறக்க நேற்று மதியம் டாஸ்மாக் ஊழியர்கள் அங்கு வந்தனர்.
சாராயக் கடை மீண்டும் திறக்கப்படுகிறது என்ற தகவல் கிடைத்ததும் குடிகாரர்கள் ஆவலோடு அங்கு வரத் தொடங்கினர்.
பெண்கள் போட்டு வைத்திருந்த பூட்டை டாஸ்மாக் ஊழியர் உடைக்க முயற்சி செய்தபோது அருப்புக்கோட்டை காவலாளர்கள் அங்கு வந்தனர். மேலும், கடையை திறக்க காவலாளர்கள் அனுமதி தரவில்லை.
கடையைத் திறந்தால் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று கூறி டாஸ்மாக் ஊழியர்களை அனுப்பிவைத்தனர். அங்கு கூடிய குடிகாரர்களும் ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்றனர்.