
விழுப்புரம்
பாஜக சார்பில் நிற்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உள்ள ஜனாதிபதி வேட்பாளரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒரு போதும் ஆதரிக்காது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில், இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு விளக்கக் கூட்டம் வானூர் தாலுகா திருச்சிற்றம்பலம் கூட்டு சாலையில் நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் கலியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வானூர் வட்ட செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ.ராமமூர்த்தி, மாநிலப் பொருளாளர் ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்தக் கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசியது:
“விழுப்புரம் மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கு ஆலைகள் தரவேண்டிய ரூ.300 கோடி நிலுவைத் தொகையை வாங்கி கொடுத்துள்ளோம்.
கல்வி கடன் உதவி வழங்காத தனியார் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி அனைவருக்கும் கல்வி கடன் கிடைக்க நடவடிக்கை எடுத்தோம்.
உழவுக்கு பயன்படாத மாடுகளை பராமரிப்பது மிகவும் சிரமமாக உள்ளது. தோல் பதனிடும் தொழிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தி பேசாத மாநிலங்களில் மோடி அரசு இந்தி திணிப்பை கட்டாயமாக்குகிறது. அந்தந்த மாநிலங்கள் விரும்பாதவரை இந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
பா.ஜ.க. சார்பில் நிற்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உள்ள ஜனாதிபதி வேட்பாளரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒரு போதும் ஆதரிக்காது. அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று கூடி ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை முடிவு செய்வோம்.
கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முதலமைச்சரிடம் முறையிட்டோம். மூன்று குழுக்கள் அமைத்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பா.ஜனதா குறித்து பேசினால் சங்பரிவார் அமைப்பினர் தாக்குதல் நடத்துகின்றனர். அந்த அமைப்பை தடை செய்யவேண்டும்.
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மக்கள் நலனை மறந்து அதிகாரப் போட்டியில் ஈடுபட்டுள்ளனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பா.ஜனதா தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறது. இது தமிழகத்தை மிகவும் பாதிக்கும்” என்று அவர் பேசினார்.