
கிருஷ்ணகிரி
ஊத்தங்கரை பரசனேரியில் பெட்ரோல், டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரி மின்கம்பத்தில் மோதி ஏரிக்குள் தலைகுப்புற கவிழ்ந்ததில் 8000 லிட்டர் டீசலும், 4000 லிட்டர் பெட்ரோலும் கசிந்து வீணானது. இதில் ஓட்டுநர் பலத்த காயமடைந்தார்.
பெட்ரோல், டீசல் நிரப்பிக் கொண்டு கரூரில் இருந்து வேலூருக்கு டேங்கர் லாரி ஒன்று நேற்று புறப்பட்டு வந்தது. 8000 லிட்டர் டீசலும், 4000 லிட்டர் பெட்ரோலும் டேங்கரில் இருந்தது.
இந்த லாரியை வேலூரைச் சேர்ந்த கன்னியப்பன் (59), வாலாஜாவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (48) ஆகியோர் மாற்றி மாற்றி ஓட்டி வந்தனர். நேற்று நண்பகலில் டேங்கர் லாரி கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் இருந்து திருப்பத்தூர் சாலையில் பரசனேரிக்கரையில் சென்றுக் கொண்டிருந்தது.
அப்போது ஓட்டுநர் பாலகிருஷ்ணன் ஓட்டி வந்தார். அப்போது திடிரென லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்கரையில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. பின்னர், அந்த லாரி எதிர்பாராதவிதமாக ஏரிக்குள் தலைகுப்புற கவிழ்ந்தது. அப்போது டேங்கர் லாரியில் இருந்த 8000 லிட்டர் டீசல், 4000 லிட்டர் பெட்ரோல், கீழே கசிந்து வீணாகி கொண்டிருந்தது.
மேலும், லாரியின் என்ஜின் ஓடிக் கொண்டிருந்ததால் தீ விபத்து ஏற்படும் அபாயம் நிலவியது. ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மட்டும் படுகாயமடைந்தார். மாற்று ஓட்டுநர் கன்னியப்பன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
விபத்து குறித்து அந்த வழியாக வந்தவர்கள் உடனடியாக ஊத்தங்கரை தீயணைப்பு நிலையம், மின்சாரத்துறை மற்றும் காவலாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மின்சாரத்துறையினர் விரைந்து வந்து சேதம் அடைந்த மின்கம்ப பகுதியில் உடனடியாக மின்சார வினியோகத்தை நிறுத்தினர்.
விபத்தில் காயம் அடைந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உடனடியாக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தகவலறிந்து வந்த ஊத்தங்கரை தீயணைப்புத்துறை வீரர்கள் 20 நிமிடங்கள் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து என்ஜினை குளிர்ச்சியடைய செய்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து ஊத்தங்கரை காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.