
விழுப்புரத்திலிருந்து கோனூருக்கு சென்றுக் கொண்டிருந்த பேருந்தில், இரவு நேரத்தில் தனியாக பயணித்த கல்லூரி மாணவிக்கு நடத்துநர் சிலம்பரசன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதற்கு ஓட்டுநர் அன்புச்செல்வன், நடத்துனர் தட்டிகேட்காமல் உடந்தையாக இருந்துள்ளார். இதுக்குறித்து மாணவி காணை காவல்நிலையத்தில் சம்பந்தப்பட்ட பேருந்து நடத்துனர், ஓட்டுனர் மீது புகார் கொடுத்தார். இதுதொடர்பான புகார் உறுதிசெய்யப்பட்டதையடுத்து, நடத்துநரும், ஓட்டுநரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் அரசு பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் அவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து கழகம் உத்தரவிட்டது.
இந்நிலையில் பேருந்தில் வரும் பயணிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுப்படும் பணியாளர் மீது நிரந்தர பணி நீக்கம் போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கிளை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், கல்லூரி மாணவியிடம் நடத்துநர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது போக்குவரத்துக் கழகத்துக்கு மாபெரும் தலை குனிவையும், களங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கழக வரலாற்றில் இது ஒரு கருப்பு நிகழ்வு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளளது. இதுபோன்ற செயல்களை போக்குவரத்துக் கழக பணியாளர்கள் வரும் காலங்களில் அனுமதிக்கக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.
விழுப்புரம் அருகே கோனூர் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண். சென்னையில் கல்லூரி ஒன்றில் படிக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு இவர் காதல் திருமணம் செய்துக்கொண்டதாக சொல்லபடுகிறது. நேற்று முன்தினம் கெடிலத்தில் உள்ள தன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டு, மாலை கோனூர் செல்ல அரசுப் பேருந்து ஒன்றில் பயணித்துள்ளார். அந்தப் பேருந்தில் இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அன்புச்செல்வன் என்பவர் ஓட்டுநராகவும், பண்ருட்டி அருகே குடுமியான் குப்பத்தைச் சேர்ந்தசிலம்பரசன் என்பவர் நடத்துநராகவும் பணியில் இருந்துள்ளனர்.
விழுப்புரத்தில் இருந்து புறப்பட்ட பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் சில பேருந்து நிறுத்தங்களில் இறங்கிவிட, அந்தப் பெண் மட்டும் தனித்து பயணித்து உள்ளார். பேருந்து ஆள் அரவமற்ற சாலையில் செல்லும் போது, நடத்துநர் சிலம்பரசன் அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லைகொடுத்ததாகக் கூறப்படுகிறது. அந்த பெண் பேருந்தை நிறுத்துமாறு கூச்சலிட்டும் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தவில்லை என விசாரணையில் தெரியவந்தது. ஒருகட்டத்தில் அப்பெண், வேறு வழியின்றி பேருந்து மெதுவாக செல்லும்போது, பேருந்தில் இருந்து குதித்து தப்பியுள்ளார்.
பின்னர் இதுகுறித்து தன் உறவினர்களிடம் தெரிவிக்க, அவர்கள் அந்தப் பேருந்து ஓட்டுநர், நடத்துநரை பிடித்து காணை காவல்நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ஒப்படைத்தனர். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைதுசெய்தனர். இதற்கிடையேஅன்புச்செல்வன், சிலம்பரசன் ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்து போக்குவரத்து கழக பொது மேலாளர் உத்தரவிட்டார்.