
கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் தொடக்க கூட்டுறவு பண்டக சாலைகள் சார்பில், ரேஷன் கடைகள், சிறிய பல்பொருள் அங்காடிகள் நடத்தப்படுகின்றன. பண்டக சாலைகளில் செயலர், கணக்கர், எழுத்தர், காசாளர் உள்ளிட்டோர் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள ஊதிய நிர்ணயம், 2016ல் நிர்ணயிக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், ஊதிய உயர்வு வழங்குமாறு கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக பரிசீலிக்க, கூடுதல் பதிவாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
அக்குழு ஊதிய உயர்வு வழங்க பரிந்துரை செய்தது.அதன் அடிப்படையில் தற்போது, புதிய ஊதியம் நிர்ணயம் செய்யுமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தொடர்ந்து லாபத்தில் இயங்கும் பண்டக சாலை ஊழியர்களுக்கு 7 சதவீதமும்; தொடர்ந்து நஷ்டத்தில் செயல்பட்டு நடப்பாண்டில் லாபம் ஈட்டிய சங்கங்களுக்கு 5 சதவீதமும் ஊதிய உயர்வு அளிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நஷ்டத்தில் செயல்படும் பண்டக சாலை ஊழியர்களுக்கு 3 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆண்டு ஊதிய உயர்வு, வீட்டு வாடகைப்படி, பயணப்படி, மருத்துவப்படி, மாற்று திறனாளிகள் போக்குவரத்துப்படி, மருத்துவக் காப்பீட்டு திட்டம் போன்றவற்றையும் செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு ஜனவரி முதல் புதிய ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.