
கடலூர்
கிராமச்சபை தீர்மானத்தின் படி, நீதிமன்றமும் “வடக்குத்து ஊராட்சியை முழு சாராய விலக்கு பெற்ற ஊராட்சியாக அறிவிக்க வேண்டும்” என தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், அதனை அமல்படுத்த ஆட்சியரிடம் மனு அளித்தனர் மக்கள்.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்டது வடக்குத்து ஊராட்சி. கடலூரிலேயே உள்ள பெரிய ஊராட்சிகளில் இதுவு, ஒன்று, இங்கு சுமார் 25 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.
மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மக்களின் பங்களிப்போடு செய்ததற்காக 2006-07-ஆம் ஆண்டில் மத்திய அரசின் “நிர்மல் புரஸ்கார்” விருதை இந்த ஊராட்சிப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் மூன்று இடங்களில் சாராயக் கடைகள் இருந்தன. நெடுஞ்சாலையோரம் உள்ள கடைகளை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மூன்று கடைகளும் அகற்றப்பட்டன.
இதில் ஒரு கடையை ஊராட்சிக்கு உள்பட்ட மற்றொரு பகுதிக்கு மாற்ற அதிகாரிகள் முயற்சித்தனர். அப்போது, மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர்.
இந்நிலையில் மக்கள் திரளாகக் கூடி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். இந்தக் கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கோ.ஜெகன் தலைமை தாங்கினார்.
அந்த மனுவில், “வடக்குத்து ஊராட்சியில் சாராயக் கடையே வேண்டாம் என்று கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு காந்தி ஜெயந்தியின் போதும் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி வருகிறோம்.
இந்த தீர்மானத்தின் அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, அதில் சாராயக் கடைகளை அமைக்கக் கூடாது என்று தீர்ப்பும் பெறப்பட்டுள்ளது.
எனவே, “கிராம சபை தீர்மானத்தின்படி வடக்குத்து ஊராட்சியை முழு சாராய விலக்கு பெற்ற ஊராட்சியாக அறிவிக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது.
அந்த மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் அதனை பரிந்துரைத்தார்.
இந்த சந்திப்பின்போது, திமுக நிர்வாகிகள் ரமேஷ், மணிகண்டராஜா, பாமக நிர்வாகிகள் செல்வகுமார், ராஜா, குமரேசன், கோவிந்தன், தி.க. மண்டல நிர்வாகி திராவிடன், பசுமைத் தாயகம் நிர்வாகி ரங்கநாதன், குடியிருப்போர் நலச் சங்கம் கோவி.கோபாலகிருஷ்ணன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.