நீர் மேலாண்மையில் தமிழ்நாடு 3வது இடம்... தேசிய நீர் விருதுகளை பெற்றது தமிழகம்!!

By Narendran SFirst Published Mar 29, 2022, 8:01 PM IST
Highlights

நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு 6 பிரிவுகளில் தேசிய நீர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. 

நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு 6 பிரிவுகளில் தேசிய நீர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஜல்சக்தி துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தேசிய நீர் விருது வழங்கப்பட்டு வருகிறது. நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களை இந்த துறையின் சிறப்புக் குழு மாநிலம் வாரியாக நேரில் கள ஆய்வு செய்து, சிறப்பாக செயல்பட்ட மாநிலத்திற்கு 3 விருதுகளும், சிறந்த மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, பள்ளிகள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றை தேர்வு செய்து, விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டது. அதற்கு விருது வழங்கும் விழா இன்று புதுடெல்லியில் விக்யான் பவனில் நடைபெற்றது.

இந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் கலந்துக்கொண்டு விருதுகளை வழங்கினர். இதில் நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உத்திரபிரதேச மாநிலத்திற்கு முதல் இடத்திற்கான விருதும், ராஜஸ்தான் மாநிலத்திற்கு இரண்டாவது இடத்திற்கான விருதும், தமிழ்நாட்டிற்கு 3 ஆவது இடத்திற்கான விருதும் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டிற்கான விருதை நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா மற்றும் நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் இராமமூர்த்தி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

அவர்களுக்கு மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் விருதை வழங்கினார். சிறந்த கிராம பஞ்சாயத்து (தென்மண்டல அளவில்) செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வெள்ளப்புதூர் ஊராட்சி இரண்டாம் இடத்திற்கான விருதும், சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பிரிவில் மதுரை மாநகராட்சி 3 ஆவது இடத்திற்கான விருதும், சிறந்த பள்ளிகள் பிரிவில், கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதல் இடத்திற்கான விருதும் பெற்றன. சிறந்த தொழில் பிரிவில் ஹுன்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட், தமிழ்நாடு இரண்டாம் இடத்திற்கான விருதும், சிறந்த தன்னார்வத் தொண்டு நிறுவன பிரிவில் கன்னியாகுமரி, விவேகானந்த கேந்திரா இரண்டாம் இடத்திற்கான விருதும் பெற்றன.

click me!