
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஓசூர் அரசு மருத்துவமனையில், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு நடத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
கடந்த 3 மாதங்களில் பலவகை காய்ச்சலால் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறினார். காய்ச்சல் வந்தால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் குடிநீரை காய்ச்சி குடிக்கவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
கேரளா மாநிலத்தில் இருந்து எலி காய்ச்சல் போன்றவை பரவாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் கூறினார்.
தமிழகத்தில் சில தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட சிலர் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியானதில் உண்மையில்லை என்றார்.
தமிழகத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் குறைவு என்றும் அவர் தெரிவித்தார். தனியார் மருத்துவமனை வேண்டுமென்றே பொதுமக்களிடம் பீதியை கிளப்பி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இது குறித்து விசாரிக்க சுகாதார துறை சார்பில் தனி குழுக்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், டெங்கு காய்ச்ச்ல குறித்து பீதியை கிளப்பும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளதாக சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.