TN Govt : தமிழக அரசை எச்சரித்த நீதிமன்றம்.. கடுப்பான தலைமை செயலாளர்.. கலெக்டர்களுக்கு ‘அதிரடி’ உத்தரவு..!

By Raghupati RFirst Published Dec 3, 2021, 7:49 AM IST
Highlights

நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமைச் செயலாளர் இறையன்பு அதிரடி உத்தரவு ஒன்றினை பிறப்பித்து இருக்கிறார்.

தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக பல்வேறு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி அதிகேசவலு அமர்வில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

ஆக்கிரமிப்புகளை அகற்றக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், இனி அது அனுமதிக்கப்படாது எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றியது குறித்து, ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

தவறும்பட்சத்தில், தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராகக் கூறி, விளக்கம் பெற வேண்டியிருக்கும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர். இந்நிலையில்   மாவட்ட ஆட்சித் தலைவர்கள், நீர்வளத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் வெ இறையன்பு ஆலோசனை நடத்தினார். 

அதில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நீர்நிலைகளின் விவரங்கள், ஆக்கிரமிப்பு தொடர்பான தகவல்கள் குறித்த விரிவான அறிக்கையை வரும் 4ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். எவ்வித சுணக்கமும் காட்டாமல் கணக்கெடுப்பு நடத்தி, தெளிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.தலைமை செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள இந்த அறிக்கை அரசு அதிகாரிகள் தரப்பில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

click me!