
தமிழகத்தில் திரையரங்குகள், உணவகங்கள் நூறு சதவீதம் இருக்கைகளுடன் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவல் கணிசமாக குறைந்ததை அடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் நடைமுறையுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் வரும் பிப்.,15 ஆம் தேதி அன்று முடிவடைகிறது. மேலும் கடந்த ஒரு வாரமாக தினசரி கொரோனா விகிதமும் பாதிப்பு எண்ணிக்கையும் நன்கு குறைந்து வருகிறது. ஜனவரி மாதத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்துக்கும் மேல் பதிவான நிலையில் தற்போது 3 ஆயிரமாக குறைந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, முதலமைச்சர் தலைமையில் இன்று காலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.அலோசனை கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு வரும் மார்ச் 2 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் வரும் 16-ம் தேதி முதல் திரையரங்குகள், உணவகங்கள் ஆகியவை 100 சதவீத இருக்கைகளுடன் இயங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, உடற்பயிற்சிக் கூடங்கள், அழகு நிலையங்களுக்கும் விதிக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படுவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கும் உள்ள தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 200 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும் என்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 100 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்கண்ட கட்டுப்பாடுகள் தவிர்த்து கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக விதிக்கப்பட்ட ஏனைய கட்டுபாடுகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நர்சரி பள்ளிகள் (LKG, UKG) மற்றும் மழைலையர் விளையாட்டுப் பள்ளிகள் (Play Schools) திறக்க அனுமதியளிக்கப்படுகிறது.பொருட்காட்சிகள் நடத்த அனுமதியளிக்கப்படுகிறது. கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.