
அமெரிக்காவில் தற்கொலை செய்துகொண்ட தம்பதியினரின் குழந்தையை மீட்டெடுக்கும் மத்திய அரசின் சட்ட மற்றும் தூதரக உதவி உட்பட அனைத்தையும் செய்து தருவதாக தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த பெருமாள் பட்டியை சேர்ந்த குருசாமி, ஈஸ்வரி தம்பதியின் மகன் பிரவீன். இவரும், திருச்சி மணப்பாறையை அடுத்த கல்பட்டி பகுதியை சேர்ந்த தமிழ் செல்வியும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு மிலன் என்கிற அழகான 2 வயது குழந்தை உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் வாழ்ந்து வந்த இந்த தம்பதியினர் கடந்த ஆண்டு மே மாதம் தற்கொலை செய்துகொண்டனர்.
இவர்களின் உடல்கள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், இவர்களுடைய 2 வயது மகனான மிலன் அமெரிக்காவில் உள்ள Missisippi department of child protection services -ன் பாதுகாப்பில் இருந்து வருகிறான். இந்நிலையில், மாநில சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலன் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், மதுரையைச் சேர்ந்த குடும்பத்திற்கு ஆதரவு கரம் நீட்ட நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அல்லது குடியிருப்போர் தமிழர் நல வாரியத்திற்கு அறிவுறுத்தினார்.
அதன்படி, அடுத்த செயல் திட்டம் குறித்து, வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகளுடன், வாரியத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி, டென்னிசியில், சமீபத்தில் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டினார். சிறுவன் பிறப்பால் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளதால், இப்பிரச்சினையை சட்டரீதியாக அணுகுவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.