அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு! மொத்தம் 9 முத்தான அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்!

Published : Apr 28, 2025, 10:11 AM ISTUpdated : Apr 28, 2025, 10:53 AM IST
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு! மொத்தம் 9 முத்தான அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்!

சுருக்கம்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மொத்தம் 9 அறிவிப்புகளை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

Tamil Nadu CM Stalin issued a total of 9 announcements  for Government Staff:தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விதி எண் 110இன் கீழ் அறிவித்துள்ளார். அரசு ஊழியர்கள், ஆசியர்களுக்கான மொத்தம்  9 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதாவது ஓய்வூதியதாரர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.4,000இல் இருந்து ரூ.6,000ஆக உயர்த்தப்படும்.

அரசு ஊழியர்களுக்கு மொத்தம் 9 அறிவிப்புகள் 

அரசு ஊழியர்களின் பிள்ளைகள் கல்வி முன்பணம் தொழிற்கல்விக்கு ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். அரசு ஊழியர்களின் பிள்ளைகள் கல்வி முன்பணம் கலை அறிவியல் கல்லூரி பயில ரூ.50,000ஆக உயர்வு. பொங்கல் பண்டிகை பரிசுத்தொகை ரூ.500இல் இருந்து ரூ.1,000ஆக உயர்த்தப்படும்.  பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பின்போது தகுதிகாண் பருவத்தையும் கணக்கில் எடுக்கலாம். மகப்பேறு விடுப்பின்போது Probation Periodo கணக்கில் எடுக்காததால் பெண் ஊழியர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

அரசு அலுவலர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண்
 கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்திலே, அரசின் நிதிநிலையின் மீது ஏற்பட்ட பெரும் சுமையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அரசு அலுவலர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறையை, 01.04.2026 முதல், 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறும் வகையில் மீண்டும் செயல்படுத்த 2025-2026-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.  இருந்தாலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த அறிவிப்பை, இந்த ஆண்டே செயல்படுத்த கோரிக்கை வைத்திருக்கிறார்கள். 
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுடைய கோரிக்கையைப் பரிசீலித்து, ஈட்டிய விடுப்பு  நாட்களில், 15 நாட்கள் வரை  1.10.2025 முதல் சரண் செய்து பணப்பயன் பெறலாம்.  இந்த அறிவிப்பின்படி, சுமார் 8 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள். இந்த அறிவிப்பை செயல்படுத்த ஆண்டு ஒன்றுக்கு 3 ஆயிரத்து 561 கோடி ரூபாய் கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.

அரசு ஊழியர்களுக்கு ரியல் ஜாக்பாட்! ஈட்டிய விடுப்பு சரண் முறை மீண்டும் அமல் - முதல்வர் உத்தரவு

அகவிலைப்படி 2 விழுக்காடு உயர்வு:
01-01-2025 முதல் 2 விழுக்காடு அகவிலைப்படி ஒன்றிய அரசு அலுவலர்களுக்கு உயர்த்தி வழங்க அறிவிக்கப்பட்டது. அதன்  அடிப்படையில், மாநில அரசுப் பணியாளர்களுக்கும் 01-01-2025 முதல் அகவிலைப்படி 2 விழுக்காடு உயர்த்தி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இந்த உயர்வினை நடைமுறைப்படுத்திட ஆண்டு ஒன்றுக்கு 1252 கோடி ரூபாய் கூடுதல் நிதி செலவிடப்படும். 

பண்டிகை கால முன்பணம் உயர்வு:
அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் குடும்பத்தினருடன் பண்டிகைகளைச் சிறப்பாகக் கொண்டாடிடும் வகையில், ஏற்கெனவே இதுவரை வழங்கப்பட்டு வரும்  பத்தாயிரம் ரூபாய் பண்டிகை கால முன்பணம் தற்போது இருபதாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.  இதனால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 இலட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.

கல்வி முன்பணம் ஒரு லட்சமாக உயர்வு:
அரசுப் பணியாளர்களுடைய குழந்தைகள் உயர்கல்வி பயில்வதில் இந்த அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது.  இதன் அடிப்படையில், அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் கல்வி முன்பணம் இந்த ஆண்டிலிருந்து தொழிற்கல்வி பயில ஒரு லட்சம் ரூபாயாகவும், கலை மற்றும் அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் பயில ஐம்பதாயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். இந்தக் கல்வி முன்பணம் உயர்வால் தங்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில விரும்பும் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.

பெண் ஊழியர்களுக்கான திருமண முன்பணம் உயர்வு 
அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், தமது பணிக்காலத்தில் தேவையின் அடிப்படையில் திருமண முன்பணமாக இதுவரை பெண் ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் மற்றும் ஆண்களுக்கு ஆறாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதனை பலமடங்கு உயர்த்தி அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் பொதுவாக ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.  

குடும்ப ஓய்வூதியதாரர்கள் பொங்கல் பரிசுத் தொகை 
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முன்னாள் கிராம பணியமைப்பு உட்பட C மற்றும் D பிரிவு ஓய்வூதியதாரர்கள், அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் மற்றும் அனைத்துக் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசுத் தொகை ஐந்நூறு ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக இனி உயர்த்தி வழங்கப்படும். இந்த உயர்வால் சுமார் 4 லட்சத்து 71 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு  ஏற்படும் கூடுதல் செலவினம் சுமார் 24 கோடி ரூபாயாக இருக்கும்.

பண்டிகை கால முன்பணம் 4,000-த்தில் இருந்து 6,000 
ஓய்வூதியதாரர்கள் அவர்தம் குடும்பத்தினருடன் பண்டிகையைச் சிறப்பாக கொண்டாடிட, தற்போது வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம், 4,000 ரூபாயிலிருந்து 6,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். இந்த உயர்வால், சுமார் 52 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர்.  இதனால் பத்து கோடி ரூபாய் கூடுதல் செலவினம்  ஏற்படும்.

பழைய  ஓய்வூதியத் திட்டம்
அண்மையில், பழைய  ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட ஒரு குழு அமைத்து, அந்தக் குழு தனது அறிக்கை மற்றும் பரிந்துரையை ஒன்பது மாதங்களுக்குள் சமர்ப்பிக்க ஆணையிடப்பட்டுள்ளது.  பல்வேறு அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையின் அடிப்படையில், இந்தக் குழு தனது அறிக்கை மற்றும் பரிந்துரையை செப்டம்பர் மாதம்  30-ம் தேதிக்குள் சமர்ப்பித்திட அறிவுறுத்தப்படும். 

திருமணமான அரசு பெண் பணியாளர்கள் மகப்பேறு:
திருமணமான அரசு பெண் பணியாளர்களுக்கு மகப்பேறுக்காக ஒன்பது மாத காலமாக இருந்த விடுப்பை 01.07.2021 முதல் ஓராண்டு காலமாக உயர்த்தப்பட்டு, ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது உள்ள விதிகளின்படி மகப்பேறு விடுப்பு காலம் தகுதிகாண் பருவத்திற்கு (Probation period) கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. இதன் காரணமாக அரசு பணிகளில் பணியாற்றி வரும் பல்லாயிரக்கணக்கான இளம் மகளிர் மகப்பேறு விடுப்பு எடுத்தால், தகுதிகாண் பருவம் உரிய காலத்திற்குள் முடிக்க இயலாமல் அவர்களுடைய பதவி உயர்வு பாதிக்கப்படுவதுடன், பணிமூப்பினை இழக்கும் நிலையும் ஏற்படுகிறது.  மகளிர் முன்னேற்றத்திற்காக அனைத்து முயற்சிகளையும் எடுத்து வரும் இந்த அரசு, அரசுப் பணிகளில் பணியாற்றிவரும் மகளிரின் பணி உரிமைகளை பாதுகாக்கும் வகையில், இனிவரும் காலங்களில் அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்புக் காலத்தினை அவர்களது தகுதிகாண் பருவத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!
திமுகவினர் என்னை இழிவாக பேசினார்கள்..! விஜய் நான் உங்கள் ரசிகன் என்றார்..! நாஞ்சில் சம்பத் பேட்டி!