
குதிரை தன் முதுகுல உட்கார்ந்திருந்தவன குப்புற தள்ளுனது மட்டுமில்லாம குஜாலா குதிச்சு மண்ணையும் அவன் மூஞ்சியில இறைச்சிவிட்டது மாதிரி தியேட்டர் ஸ்டிரைக் விவகாரத்தை தமிழக அரசின் தலையில் தூக்கி வைத்திருக்கிறார் தமிழிசை!
அ.தி.மு.க.வோடு பி.ஜே.பி. வைத்திருக்கும் உறவு புரியாத புதிராகத்தான் இருக்கிறது. பி.ஜே.பி.யின் டெல்லி தலைமையின் தாளத்துக்கு ஏற்பத்தான் தமிழகத்தின் பன்னீரும், பழனிசாமியும் நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதேநேரத்தில் தமிழக பா.ஜ.க.வோ சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தமிழக அரசை வறுத்தெடுத்து வாயில்போட்டு சவைத்து தள்ளுகிறது. அதில் தமிழிசையின் பாய்ச்சல் பாயும் புலி பாய்ச்சலாகத்தான் இருக்கிறது.
உதாரணத்துக்கு இந்த தியேட்டர் மூடல் விவகாரத்தில் “தியேட்டர் உரிமையாளர்களின் போராட்டத்துக்கு மத்திய அரசின் சேவை, சரக்கு வரி காரணமே இல்லை. சினிமா டிக்கெட்டுக்கு தமிழக அரசு 30% கேளிக்கை வரி விதித்ததால்தான் அவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். எனவே இந்த போராட்டத்துக்கு தமிழக அரசே காரணம் ஆகும்.
ஒரு விஷயம் தெரியுமா? இந்த வரிவிதிப்பை புரட்சிகளின் தாய் அப்படின்னுதான் சொல்றாங்க. இந்தியாவுக்கு நள்ளிரவில்தான் சுதந்திரம் கிடைத்தது. அது மாதிரி நடு இரவில் இந்த நாட்டுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்தது. எனினும் விமர்சனங்கள் ஆங்காங்கே எழுந்துகிட்டுதான் இருக்குது.
ப.சிதம்பரம் என்னவோ தாங்கள்தான் ஜி.எஸ்.டி.யை கொண்டு வர முயற்சித்ததாக கூறுகிறார். அப்படின்னா பாராளுமன்றத்திற்கு வந்து ஜி.எஸ்.டி.யை அறிமுகப்படுத்தியிருக்க வேண்டியதுதானே! இப்போ சொல்றேன் ஜி.எஸ்.டி.யால் கிடைக்கும் எந்த பெருமையும் காங்கிரஸை சேராது.” என்று ஜி.எஸ்.டி.க்கு செம்ம பப்ளிகுட்டி கொடுத்தவர், தமிழக அரசையும் புரட்டி எடுத்திருக்கிறார்.
ஜி.எஸ்.டி.யால் தியேட்டர் கட்டணங்களில் ஐந்து பைசா கூட அதிகமாகவில்லை என்பது போல் தமிழிசையின் தாளிப்பு இருப்பது எடப்பாடி உள்ளிட்ட அமைச்சரவையை எரிச்சலடைய வைத்திருக்கிறது.
பா.ஜ.க.வின் இந்த டபுள் கேம் அ.தி.மு.க. இரண்டாம் கட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை குழப்பமடைய வைத்திருக்கிறது!? யக்கா நீங்க எங்களுக்கு நண்பனா இல்ல எதிரியா? என்று புலம்புகிறார்கள்.
அவசியம் விடை தெரியணும்னா அமித்ஷாவை கேளுங்க பாஸ்!