
மதுரையில் முருகன் மாநாடு : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவினர் மதுரையில் ஒன்று கூடினால் திமுகவினருக்கு ஏன் அச்சம் ஏற்படுகிறது. மதுரையில் ஆட்சி புரியும் மீனாட்சியும், முருகனும் பாஜகவிற்கு அருள் புரிந்து விடுவார்கள் என்று திமுகவினர் அச்சப்படுகின்றனர் என தெரிவித்தார். மதுரை சங்கம் வைத்து தமிழை வளர்த்த இடம் அதனாலேயே எங்களை சங்கீகள் என சொல்கிறார்கள் அதற்கு நாங்கள் கவலைப்படவில்லை. சங்கம் வைத்த இடத்தில் சங்கிகளின் சக்தி அதிகமாகிறது என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், மத்திய அமைச்சர் அமித்ஷா மதுரை வருகை எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. புதிய நிர்வாகிகளுக்கு புதிய ரத்தத்தை பாய்ச்சுவதற்காக அமித்ஷா வருகை தருகிறார் அவரது வருகை எங்களுக்கு உற்சாகத்தை தருகிறது திமுக கூட்டணிக்கு பதட்டத்தை தந்துள்ளதாகவும் கூறினார். நாங்கள் பயபக்தியோடு மதுரையில் முருகன் மாநாட்டை நடத்துகிறோம். அமைச்சர் சேகர்பாபு போன்றவர்கள் பயத்துடன் முருகன் மாநாட்டை பார்க்கின்றனர். உண்மையான திமுகவினருக்கு கடவுள் பக்திகள் இருக்கிறது முதல்வர், துரைமுருகன் அனைவருமே சாமி கும்பிடுகிறார்கள்.
மதுரையில் நடைபெறும் முருகன் மாநாட்டிற்கு திமுகவினரே ரகசியமாக வருவார்கள், முருகன் மீது பக்தி கொண்டவர்கள் நிச்சயமாக வருவார்கள் என தெரிவித்தார். எங்களை ஒட்டாத கூட்டணி என்கின்றனர். எங்கள் கூட்டணி ஒட்டும் கூட்டணி. ஓட்டுக்கான கூட்டணி, நாட்டுக்கான கூட்டணி என தெரிவித்த தமிழிசை 2026ஆம் ஆண்டு திமுகவும் அவர்கள் கூட்டணியும் ஓய்வு எடுக்கலாம், எங்களுக்கு நிச்சயம் வெற்றி வரும் என கூறினார்.