தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு..வங்கிஅதிகாரிகள் மீது புகார்..வருத்தம் தெரிவித்த ஆர்.பி.ஐ.

By Thanalakshmi VFirst Published Jan 27, 2022, 2:35 PM IST
Highlights

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு குறித்த சர்ச்சையில், ரிசர்வ் வங்கி தரப்பிலிருந்து தமிழக அரசிடம் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

73-வது குடியரசுதினவிழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், அரசுத்துறை அலுவலகங்களிலும் தேசிய கொடி ஏற்றி குடியரசு தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதனொரு பகுதியாக சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள இந்திய ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. அப்போது தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்த நேரத்தில் அங்குள்ள சில அதிகாரிகள் எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அங்கிருந்த செய்தியாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் அந்த ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, `தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கும் போது எழுந்து நிற்க வேண்டிய தேவையில்லை என்ற உயர்நீதிமன்ற உத்தரவு அமலில் இருக்கின்றது. அதனால் நாங்கள் எழுந்திருக்க வேண்டிய அவசியமில்லை. எங்கள் செயலுக்காக வருத்தம் தெரிவிக்கவும் முடியாது’ என அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருள் ஆனது.

கடந்த 17.12.2021 அன்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவித்து, தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்வு துவங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும். பாடல் பாடும்போது மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள்,கர்ப்பிணிகள் தவிர அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் எனும் அரசாணையை வெளியிட்டார்.

இந்நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நிற்காத செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்தனர். இதனையடுத்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதற்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டது. கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும்.மேலும் இசைத்தட்டுகளை கொண்டு இசைக்கப்படுவதை தவிர்த்து தமிழ்த்தாய் வாழ்த்தை வாய்ப்பாட்டாக பாட வேண்டும் என கூறப்பட்டது.

இதனிடையே குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காமல் அவமதித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது சென்னை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆன்லைன் மூலம் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு புகார் அளித்துள்ளார். அதில் தமிழ்நாடு அரசாணையை அவமதித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படியான சூழலில், ரிசர்வ் வங்கி சார்பில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அதிகாரிகள் எழுந்து நிற்காதது தொடர்பாக தமிழக அரசிடம் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனிடம், ஆர்.பி.ஐ. மண்டல இயக்குநர் எஸ்.எம்.என்.சாமி இதுகுறித்து நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

click me!