யார் இந்த மாணவர்? இந்தியாவின் எந்த பகுதியை சேர்ந்தவர்? உக்ரைனில் என்ன பண்ணுகிறார்? முதற்கட்டத் தகவல்கள் இதோ...
வரலாற்றில் எப்போதோ நிகழ்ந்த யுத்தங்களின் கோரங்களையும், பயங்கரங்களையும், துயரங்களையும் புத்தகங்களில் வாசிக்கையிலேயே நமது அடிவயிறு கலங்கும். ஆனாலும் ஈழத்தில் நடந்த இறுதிப்போரின் குரூரங்கள் நம் மனதை விட்டு நீங்கவில்லைதான். ஆனாலும் சமகால மனிதர்களான நமக்கு போரின் ராட்சஸத்தனத்தை தினம் தினம் பார்க்கும் துயர வாய்ப்பு அடிக்கடி எழாதது ஒரு வரமாகதான் இருந்தது.
ஆனால் அந்த வரம் சமீபத்தில் சாபமாக மாறியது, ஆம், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் யுத்தமானது உலக நாடுகளை அதிரவும், கலங்கவும் வைத்துக் கொண்டிருக்கிறது. இயல்பிலேயே மிகவும் சென்டிமெண்ட் மனிதர்களான இந்தியர்கள் இந்த யுத்த சத்தத்தின் நடுவே விசும்பி அழுகிறார்கள். அதற்கு பர்ஷனல் காரணமும் ஒன்று உண்டு. அதாவது, இந்தியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் உக்ரைனில் உயர்கல்வி படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கல்விக்கட்டணம் மிக குறைவு, அப்டேடட் கல்வி எனும் சில காரணங்களால் படிக்க சென்றவர்கள் அவர்கள். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க துவங்கியதுமே பதுங்கு குழிகளில் பதுங்கிக் கிடந்தபடியே வீடியோ காலில் இந்தியாவுக்கு பேசி ‘எங்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்’ என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பல ஆயிரம் பேரை மத்திய அரசு காப்பாற்றியுள்ளது, இன்னமும் மீட்பு தொடர்கிறது.
எங்களைக் காப்பாற்றுங்கள், நாங்கள் இந்தியா திரும்ப துடிக்கிறோம்! என்று கைகூப்பும் இந்திய மாணவர்களுக்கு மத்தியில் ஒரேயொரு மாணவர் மட்டும் ‘நான் இந்தியா வர விரும்பவில்லை. நான் யுத்த களத்தில் உக்ரைன் வீரர்களுக்கு தோள் தந்து நிற்கிறேன்’ என்று கூறியுள்ளார். அவரது கரங்களின் சக்தி வாய்ந்த இயந்திர துப்பாக்கி, கண்களில் ரஷ்யாவுக்கு எதிரான தீப்பொறி.
யார் இந்த மாணவர்? இந்தியாவின் எந்த பகுதியை சேர்ந்தவர்? உக்ரைனில் என்ன பண்ணுகிறார்?
முதற்கட்ட தகவல்கள் தரும் விளக்கம்….
இந்த மாணவர் பெயர் சாய்நிகேஷ், தமிழகத்தை சேர்ந்தவர். ஆம், கோயமுத்தூர் சிட்டி அருகேயுள்ள சுப்பிரமணியம்பாளையம் பகுதியின் சுவாதிகார்டன் பகுதியை சேர்ந்தவர். இவரது முழுப்பெயர் சாய்நிகேஷ் ரவிச்சந்திரன். விமானத்துறை படிப்பிற்காக கடந்த 2019ல் உக்ரைன் சென்றார். அங்கிருக்கும் கார்கோ நேஷனல் ஏரோஸ்பேஷ் பல்கலையில் படிக்கிறார். நான்காமாண்டு மாணவரான இவர் இப்போது இந்த யுத்த நேரத்தில், உக்ரைன் பாதுகாப்பு துறையின் கீழ் வரும் ‘ஜார்ஜியன் நேஷனல் லிஜியன்’ எனும் துணை ராணுவப்படையில் இணைந்துள்ளார். இந்த தகவல் இந்திய உளவுத்துறைக்கு கிடைத்ததும், உடனடியாக கோவையிலுள்ள அவரது வீடு மற்றும் குடும்பத்தை தீர விசாரிக்க துவங்கியுள்ளனர்.
சாய்நிகேஷுக்கு ராணுவத்தில் பணிபுரிய ஆசை. இந்திய ராணுவத்தில் இணைய விண்ணப்பித்திருக்கிறார். ஆனால் உயரம் குறைவு என்பதால் வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பாதுகாப்பு துறையில் உயரிய நிலை செல்ல வேண்டும் எனும் வெறியில் அமெரிக்க தூதரகத்திலும் முயன்று தோற்றுள்ளார். இந்த நிலையில்தான் உக்ரைனில் அவர் இருக்க, அங்கே போர் நடக்க, உடனடியாக உக்ரைனின் துணை ராணுவப்படையில் இணைந்துவிட்டார்.
இந்த விவகாரம் தேசம் முழுக்க பரபரப்பைக் கிளப்பியிருக்கும் நிலையில், சாய்நிகேஷ் மட்டும்தான் இப்படி உக்ரைன் ராணுவத்தில் இணைந்துள்ளார், வேறு எந்த இந்திய மாணவரும் இப்படி செயல்படவில்லை! என்று இந்திய பாதுகாப்புத்துறை சொல்லியிருக்கிறது. மாநில மற்றும் மத்திய புலனாய்வு மற்றும் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் கோவையில் உள்ள சாய்நிகேஷின் குடும்பத்தினரை சந்தித்து விரிவாக விசாரித்து வருகின்றனர். அவர்கள் மூலமாக சாய்நிகேஷிடம் தொடர்பு கொண்டு ‘திரும்பி வாங்க தம்பி. நம்ம நாட்டு பாதுகாப்பு துறையில் உங்களுக்கான வாய்ப்புகளை தேடுவோம்’ என்றெல்லாம் கூட சொல்லியிருக்கின்றனர். அதற்கு சாய் ‘நிச்சயமாக. போர் முடிந்ததும் வர்றேன். எனக்கு படிப்பு சொல்லி தரும் நாட்டுக்காக யுத்தகளத்தில் நிற்பவன், இந்தியாவுக்காக நிற்கமாட்டேனா! போர் முடியட்டும் வர்றேன்’ என்று அதிரடியாகவும், உறுதியாகவும் சொல்லியுள்ளார்.
சாய்நிகேஷின் அம்மா ஜான்ஸி லட்சுமியே எதையும் வெளிப்படையாக சொல்ல இப்போதைக்கு தயாராக இல்லை.
இந்தியன் எங்கே நின்னாலும் வீரனாதான் நிற்பான்..!