Attack on News Reporter : திருப்பூர் பல்லடத்தில் செய்தியாளர் நேசபிரபு தாக்கப்பட்டதன் பின்னணி குறித்து விசாரிக்க மூத்த ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், எதிர்க்கட்சித் தலைவரைப் போல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவிப்பது வேடிக்கையாக இருக்கிறது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில் சட்டவிரோத மது விற்பனை, மற்றும் சட்டத்துக்கு விரோதமாக நடக்கும் பல்வேறு குற்றச் செயல்களை, தான் பணியாற்றிய தொலைக்காட்சியில் அமல்படுத்தி வந்தார் செய்தியாளர் நேசபிரபு.
இதனால் ஆத்திரமடைந்த சமூக விரோத கும்பல் திட்டமிட்டு அவரை வெட்டி படுகொலை செய்ய முயன்றுள்ளது. கடவுள் அருளால் அவர் உயிர் தப்பி இருக்கிறார். தமிழ்நாட்டில் நடக்கும் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீரழிந்து வருகிறது என்பதற்கு இந்த சம்பவம் ஓர் உதாரணம். சமூகத்தில் நடக்கும் சட்ட விரோத, மக்கள் விரோதச் செயல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து, தீர்வு காண வழிவகை வகுப்பதே பத்திரிகையாளரின் கடமை.
உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனத் தெரிந்தும் தனது கடமையை துணிச்சலுடன் செய்திருக்கிறார் நேசபிரபு. ஆனால் திமுக அரசும், காவல்துறையும் தனது கடமையை செய்ய தவறியதால் நேசபிரபு கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அரசுக்கு எதிரான செய்திகளை சமூக பொறுப்புடன் நேர்மையாக வெளி கொண்டுவரும் ஊடகவியலாளர்களுக்கு என்ன நடக்கும் என்பதற்கு உடல் முழுக்க 62 வெட்டு பட்டு, கை, கால்கள் துண்டாகி மீண்டும் ஒட்ட வைக்கபட்டு வென்டிலேட்டரில் உயிருக்கு போராடி வரும் நிருபர் நேசபிரபுவே சாட்சி.
தமிழ்நாட்டில் பத்திரிகையாளர் ஒருவருக்கே உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீரழிந்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது கடும் கண்டனத்திற்குரியது. தமிழக அரசு உடனடியாக இந்த கொடிய சம்பவத்திற்கு கடுமையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் உண்மையை உரக்கச் சொல்லும் பத்திரிகையாளர்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லாமல் போய்விடும்.
சமூக விரோதச் செயல்களைத்தான் திமுக அரசால் தடுக்க முடியவில்லை. அதை அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர் உயிருக்காவது திமுக அரசு பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும். ஆனால், தனது கடமையை செய்ய தவறி விட்டு, நேசபிரபு தாக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவரைப் போல, காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது வேடிக்கையாக இருக்கிறது.
பத்திரிகையாளர் நேசபிரபு தாக்கப்பட்டதை சாதாரணமாக கடந்து சென்று விட முடியாது. அப்படிச் சென்று விடவும் கூடாது. இதில் ஒரு சிலர் மட்டுமே சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை. இதில் மிகப்பெரிய அளவில் சமூக விரோதக் கும்பலும், அரசியல் அதிகாரம் கொண்டவர்களின் பின்னணியும் இருக்க வாய்ப்புள்ளது.
எனவே, நேசபிரபு தாக்கப்பட்டதன் பின்னணியில் உள்ளவர்களை கண்டறிய, மூத்த ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் குழு ஒன்றை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும். மேலும் இந்த வழக்கு விசாரணை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தி முடிக்கப்பட்டு நேச பிரபுவை துடிக்க துடிக்க கொல்ல முயன்ற குற்றவாளிகள் மற்றும் பின்னணியில் அரசியல்வாதிகள் ,சமூக விரோதிகள் அனைவரையும் கண்டறிந்து உச்சபட்ச தண்டனை வழங்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை அறிந்து, காவல்துறையிடம் புகார் அளித்தும் நேசபிரபுவை பாதுகாக்க காவல்துறை தவறி இருக்கிறது. இதுவும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. கடந்த செப்டம்பர் மாதம் பல்லடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் நான்கு படுகொலை செய்யப்பட்டதை துப்புத் துலக்கி உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் நேசபிரபு, மேலும் கொலையாளிகள் கைது செய்யபடும் வரை விடாமல் செய்திகளை ஒரு சிறந்த புலனாய்வு நிருபராக பாலோ செய்து, கொலைக்கு முக்கிய ஆதாரமான சிசிடீவி காட்சிகளை வெளியிட்டதும் நேசபிரபுதான்.
மேலும் பல்வேறு சமூக நல்ல பிரச்சனைகளை துடிப்புடன் செய்தியாக்கி சமூக விரோத சக்திகளை அடையாளம் காட்டிய நேசபிரபுவின் புகாரை அலட்சியப்படுத்திய காவல்துறை அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க தவறினால் தமிழகத்தில் பத்திரிகையாளர்களுக்கு அச்சுறுத்தல்களையும், கொடிய தாக்குதல்களையும் சமூகவிரோதிகள் அரங்கேற்றம் சூழ்நிலை உருவாகும்.
மேலும் மக்கள் நலனுக்காக தனது கடமையை செய்த நேசபிரபுவின் சிகிச்சை செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசு ஏற்பதோடு, ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
புரோட்டா இல்லை என்று கூறிய கடைக்காரரை காற்றில் பறக்க விட்டு பந்தாடிய ரௌடிகள்