
தமிழகம் முழுவதும் உள்ள 22 வட்டாரப் போக்குவரத்து அலுவலக (RTO) சோதனைச் சாவடிகளில் ஊழலைக் கட்டுப்படுத்தவும், மாநில எல்லைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் ஏ.என்.பி.ஆர். (ANPR - Automatic Number Plate Recognition) கேமராக்களை நிறுவ, தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் ஒப்புதல் அளித்துள்ளது.
22 ஆர்.டி.ஓ. சோதனைச் சாவடிகளிலும் இரவு நேரப் பார்வை வசதியுடன் கூடிய 110 ANPR கேமராக்கள் நிறுவப்படவுள்ளன. இந்த கேமராக்கள் தானியங்கி முறையில் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளைக் கண்காணிக்கக்கூடியவை.
பெத்திகுப்பம், பூந்தமல்லி, திருத்தணி, திருச்சிற்றம்பலம் (விழுப்புரம்), காட்பாடி, ஓசூர், கே.ஜி. சாவடி உள்ளிட்ட 9 முக்கிய இடங்களில் வேகத்தைக் கண்டறியும் கேமராக்களும் பொருத்தப்படும்.
பன்னாரி, ஓசூர், சேர்காடு, பெத்திகுப்பம் போன்ற அதிக நெரிசல் உள்ள எல்லைச் சாவடிகளில் வாகனங்கள் குவியாமல் இருப்பதை குறைப்பதும், வாகன கண்காணிப்பை டிஜிட்டல் மயமாக்குவதும் இதன் முக்கிய இலக்காகும்.
இனி, வணிக மற்றும் சுற்றுலா வாகனங்கள் சாலை வரிகளை ஆன்லைனில் செலுத்தலாம் மற்றும் வாகனத்தில் இருந்து இறங்காமல் சோதனைச் சாவடிகளைக் கடந்து செல்லலாம்.
இதற்கு முன்னர், ஆன்லைனில் வரி செலுத்திய பிறகும், குறிப்பாக வெளிமாநிலப் பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் போன்ற வணிக வாகனங்களிடம் சோதனைச் சாவடி அதிகாரிகள் லஞ்சம் கேட்டதால், பல தாமதங்கள் ஏற்பட்டன.
சமீபத்தில், பூந்தமல்லி சோதனைச் சாவடியில் மோட்டார் வாகன ஆய்வாளரிடம் இருந்து ரூ.1.72 லட்சம் மற்றும் கிறிஸ்டியன்பேட்டை சோதனைச் சாவடியில் ரூ.95,000 கைப்பற்றப்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) சோதனைகளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ANPR மற்றும் வேக கேமராக்கள், கிண்டியில் உள்ள மாநிலப் போக்குவரத்து ஆணைய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மத்திய கண்காணிப்பு அமைப்புடன் (Central Monitoring System) ஒருங்கிணைக்கப்படும்.
இந்த டிஜிட்டல் தளமானது வாகன நகர்வுகளை நிகழ்நேரத்தில் கண்காணிப்பது, ANPR பகுப்பாய்வுகள், வேக மீறல்களைத் தானாகக் கண்டறிந்து எச்சரிக்கை செய்வது மற்றும் வீடியோ, படங்கள் மூலம் ஆதாரங்களைச் சேகரிப்பது போன்ற வசதிகளை வழங்கும்.
இந்த அமைப்பு வாகனப் பதிவுக்கான 'வாஹன்' (VAHAN) போர்ட்டல் மற்றும் ஓட்டுநர் உரிமம் தரவுகளுக்கான 'சாரதி' (SARATHI) போர்ட்டல் ஆகியவற்றுடன் இணைக்கப்படும்.
வாகனங்கள் தமிழ்நாட்டிற்குள் நுழைவதற்கு முன் வரி செலுத்தியதைச் சரிபார்ப்பதோடு மட்டுமல்லாமல், ஹெல்மெட் அணியாதது, ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்துவது, சீட் பெல்ட் அணியத் தவறியது உள்ளிட்ட விதிமீறல்களுக்கு இந்த ANPR அமைப்பு தானாகவே சலான்களை உருவாக்கும்.
இந்த 22 ஆர்.டி.ஓ. சோதனைச் சாவடிகளும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்குள் நுழையும் வாகனங்களுக்குத் தற்காலிக அனுமதிச் சீட்டுகள் வழங்குதல் மற்றும் சாலை வரி வசூலித்தலில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
2024-25 நிதியாண்டில், இந்தச் சோதனைச் சாவடிகள் மூலமாக ரூ.230.04 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
இந்த நவீன தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம், சோதனைச் சாவடிகளில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என்றும், காலதாமதம் தவிர்க்கப்பட்டு, தமிழக எல்லைகளில் போக்குவரத்து சீராகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.