தமிழக மாணவர்களுக்கு டெல்லியில் எந்தப் பாதுகாப்பும் இல்லை - இறந்த மருத்துவ மாணவர் சரவணனின் தந்தை குற்றச்சாட்டு...

First Published Jan 19, 2018, 8:20 AM IST
Highlights
Tamil Nadu students do not have any protection in Delhi - Saravanan father


திருப்பூர்

தமிழக மாணவர்களுக்கு டெல்லியில் எந்தப் பாதுகாப்பும் இல்லை என்று சென்றாண்டு டெல்லியில் மர்மமான முறையில் இறந்த மருத்துவ மாணவர் சரவணனின் தந்தை  குற்றம் சாட்டியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம், வெள்ளியங்காடு, கோபால் நகரைச் சேர்ந்தவர் ஜி.சரவணன் (24). மதுரை மருத்துவக் கல்லூரியில் கடந்த 2009 - 2015ஆம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ். படித்தவர்,

அதனைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மேற்படிப்பில் (எம்.டி. பொது மருத்துவம்), 2016-ஆம் ஆம் ஆண்டு ஜூன் இறுதியில் சேர்ந்தார்.

தெற்கு டெல்லி, ஹோஸ் காஸ் பகுதி, கௌதம் நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நண்பர் ஒருவருடன் வாடகைக்கு அறை எடுத்துத் தங்கியிருந்தவர், கடந்த 2016 ஜூலை 10-ஆம் தேதி அவரது அறையில் சடலமாக டெல்லி காவலாளர்களால் மீட்கப்பட்டார்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த டெல்லி காவலாளர்கள், அவர் தனது உடலில் ஊசி மருந்து செலுத்தியதற்கான அடையாளங்கள் தென்பட்டுள்ளது என்றும், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

ஆனால், அதன்பின்னர், சரவணன் தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பே இல்லை என்பது மருத்துவ ஆய்வில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து வழக்கின் விசாரணை மாறியது.

இந்த நிலையில், மருத்துவ மாணவர் சரவணனின் தந்தை கணேசன், சரத் பிரபுவின் வீட்டுக்கு இரங்கல் தெரிவிக்க நேற்று வந்திருந்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம், "டெல்லி எய்ம்ஸ் கல்லூரியில் மேற்படிப்புக்காகச்  சென்ற என் மகனை, அங்கு சேர்ந்த பத்து நாள்களிலேயே விஷ ஊசி போட்டுக் கொன்று விட்டு, தற்கொலை எனக் கூறி வழக்கை முடித்துவிட நினைத்தார்கள்.  

அது தற்கொலை இல்லை என்று நாங்கள் பலமுறை போராடியும், அங்குள்ள காவல்துறையும், எய்ம்ஸ் நிர்வாகமும் அது தற்கொலையே என்று கூறி எங்களை ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

எனினும், நாங்கள் உறுதியாக இருந்து வழக்குத் தொடுத்தோம். பின்னர் சரவணனின் மறு உடற்கூராய்வில் கொலைக்கான சாத்தியங்கள் இருப்பதாகக் கூறப்பட்டது. என் மகனுக்கு நேர்ந்த அதே நிலைதான் சரத் பிரபுவுக்கும் நேர்ந்திருக்கிறது.  

தமிழக மாணவர்களுக்கு டெல்லியில் எந்தப் பாதுகாப்பும் இல்லை என்று  நான் தொடர்ந்து கூறி வருகிறேன். இது தொடர்பாக தமிழக அரசும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

இனியாவது தமிழக மாணவர்களுக்கு இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க, தமிழக அரசும், டெல்லி அரசும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
 

click me!