தமிழகத்தை இருளில் மூழ்கடிக்கப் போகும் அடுத்த அதிர்ச்சி! 

Asianet News Tamil  
Published : Oct 26, 2017, 02:35 PM ISTUpdated : Sep 19, 2018, 01:21 AM IST
தமிழகத்தை இருளில் மூழ்கடிக்கப் போகும் அடுத்த அதிர்ச்சி! 

சுருக்கம்

Tamil Nadu staring at major power crisis

தமிழகத்தின் அடுத்த தலையாய பிரச்னையாக உருவெடுத்திருப்பது மின்சாரத் தட்டுப்பாடு என்கிறார்கள். தற்போதே, பல இடங்களில் மின்வெட்டு இரவு நேரங்களில் நீடிக்கிறது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும், தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு வழக்கமாகியுள்ளது.

மின் உற்பத்திக் குறைவால்தான் மின்வெட்டு என்றாலும், உற்பத்திக் குறைவுக்கு மூலப்பொருளான நிலக்கரியின் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புதான் இதற்கான முக்கியக் காரணம் என்கிறார்கள். தமிழகத்துக்கு முக்கிய நிலக்கரி விநியோக மாநிலங்களாகத் திகழ்பவை ஒடிஷாவும் ஆந்திர மாநிலமும். அங்குள்ள நிலக்கரிச் சுரங்கங்களில் இருந்து மிகக் குறைந்த அளவே நிலக்கரி விநியோகிக்கப் படுவதால், மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். 

தமிழகத்துக்கான நிலக்கரித் தேவை, நாள் ஒன்றுக்கு 75 ஆயிரம் டன்கள். ஆனால், இதுநாள் வரையில் நாளொன்றுக்கு 30 ஆயிரம் டன்களே நிலக்கரி விநியோகிக்கப் பட்டு வருகிறது.பொதுவாக, அடுத்து வரும் 30 நாட்களுக்குத் தேவையான  நிலக்கரி கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். ஆனால், வெறும் 3 நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு உள்ளது என்கிறார்கள். 

நீர் மின் நிலையங்கள், அனல் மின் நிலையங்களைச் சார்ந்தே மின் உற்பத்தி தற்போது இருப்பதாகவும், காற்றாலை மின்சாரம் இப்போது பெரிதும் குறைந்துவிட்டது  என்றும் கூறும் மின் துறை அதிகாரிகள், கிடைப்பதை வைத்து மின் உற்பத்தியை ஈடுகட்டுவதாகக் கூறுகின்றனர். 

இதனிடையே இந்தப் பிரச்னையை மத்திய அரசிடம் எடுத்துச் சென்றிருக்கின்றனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மின் துறை அமைச்சர் பி.தங்கமணி, முதன்மைச் செயலர் கிரிஜா வைத்யநாதன் ஆகியோர் இந்தப் பிரச்னையை மத்திய நிலக்கரி மற்றும் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் முன் எடுத்துச் சென்றதாகவும், தமிழ்நாடு பொது மற்றும் மின்பகிர்மானக் கழகத்துக்கு  கூடுதல் நிலக்கரி விநியோகத்துக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் கோரினராம். 

நிலக்கரி விநியோக பாதிப்பால், 110 மெ.வா. மின் உற்பத்தி யூனிட்கள் 12ல் 7ம், 600 மெ.வா., மின் உற்பத்தி யூனிட்கள் 3ல் 2ம் இயங்குவது நிறுத்தப் பட்டிருப்பதாக அதிகாரிகள் மட்டத்தில் கூறப்பட்டது. பொதுவாக நாள் ஒன்றுக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரித் தேவை என்பது 15 ரேக்குகள் மூலம் பெறப்படும். ஆனால் 9 ரேக்குகளே நாளொன்றுக்கு கடந்த 2 மாதங்களாகப் பெற்று வருகிறோம் என்கின்றனர் அதிகாரிகள். 

தற்போது, தென் மேற்குப் பருவமழை முடிந்து வடகிழக்குப் பருவமழை தொடங்குவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், காற்றின் வேகம் குறைந்து,  காற்றாலை மின் உற்பத்தி  503 மெகாவாட் என பத்தில் ஒரு பங்காகக் குறைந்தது.  

இதனால் தமிழகத்தில் மின் பற்றாக்குறை ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதைச் சமாளிக்க வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை வாங்க வேண்டிய சூழலும் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. 

இப்போதும் தமிழகத்தை அடுத்தடுத்து பிரச்னைகள் சூறாவளியாய் சுழன்றடிக்கும் போது, அடுத்து மின் தட்டுப்பாடும் சேர்ந்து இருளில் மூழ்கினால் மேலும் பிரச்னைகள் உருவெடுக்கும்.
 

PREV
click me!

Recommended Stories

எடப்பாடி பழனிசாமியின் முடிவுக்கு சி.வி. சண்முகம் கடும் எதிர்ப்பு...! | CV Shanmugam vs EPS
TVK Vijay: சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு! வீட்டுக்கு போய் தரமான பதிலடி கொடுத்த முதல்வர் விஜய்