
முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கந்துவட்டி கொடுமையின் உண்மை முகத்தை தோலுரித்து கந்துவட்டி கொடுமையை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது.
அதற்குக் காரணம்.. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒரு குடும்பமே தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம்தான்.
இந்த சம்பவத்திற்குப் பிறகுதான் கந்துவட்டியை ஒழிக்க வேண்டும் என்ற குரல் வலுத்துள்ளது. அதிலும் குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமை தலைவிரித்தாடுகிறது.
நெல்லை மாவட்டத்தில் அதிகமான வட்டிக்கு பணம் கொடுக்கும் கந்துவட்டி கொடுமை மட்டும் இல்லையாம்.. அதையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு நவீன வசூல் வேட்டை நடந்துகொண்டிருக்கிறதாம்.
நெல்லை மாவட்டத்தில் பீடி சுற்றும் தொழிலில் ஏராளமான பெண்கள் ஈடுபட்டுள்ளனர். வீட்டு வறுமையைப் போக்குவதற்காக பெண்கள் பீடி சுற்றும் வேலைக்கு செல்கின்றனர். கடையநல்லூர், சுரண்டை, பாவூர்சத்திரம், ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள கிராமங்களின் பெண்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
வயிற்றுப் பிழைப்புக்காக பீடி சுற்றும் பெண்களின் உழைப்பை சுரண்டும் வகையில் அந்த பெண்களை இலக்காக வைத்து ஒரு குரூப் செயல்படுகிறது.
பீடி சுற்றும் பெண்களின் வீடுகளில் உள்ள ஆண்களின் பைக் ஆசையை வைத்து பணத்தை அறுவடை செய்கிறது இந்த குரூப். அந்த பெண்களின் கணவர், மகன் ஆகியோருக்கு பைக் ஆசையை ஏற்படுத்துகிறது.
மொத்த தொகையையும் செலுத்தி பைக் வாங்க முடியாத அந்த குடும்பம், தவணை முறையில்தான் வாங்க முடியும். ஆனால் அதற்கு, வங்கிக்கணக்கு புத்தகம், காசோலை உள்ளிட்ட ஆவணங்கள் கொடுக்க வேண்டும். ஆனால், இவையெல்லாம் கொடுக்காமல் எளிதாக வாங்கித்தருவதாக கூறி பைக் பைனான்சியர்கள் அவர்களை அணுகுகிறார்கள்.
பீடி சுற்றும் பெண்களுக்கு வாரத்திற்கு 1500 முதல் 2000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். இந்த பெண்களின் உழைப்பை சுரண்டுவதுதான் அந்த குரூப்பின் திட்டம்.
புது பைக்கோ அல்லது பழைய பைக்கோ ஏதோ ஒன்றை வாங்கிக் கொடுக்கிறார்கள். உதாரணத்துக்கு புது பைக்கின், விலை 50000 ரூபாய் என வைத்துக்கொள்வோம். ஆனால் பைக் வாங்கிக் கொடுப்பவர்கள், வசூலிக்கும் தொகையோ சுமார் 80000.
முதலில் பைக்கை அவர்களுக்கு வாங்கிக் கொடுத்துவிடுகின்றனர். பின்னர் பீடி சுற்றும் அந்த வீட்டு பெண்களிடமிருந்து வார சம்பளத்தில் 1000 ரூபாயை பெற்றுவிடுகின்றனர். பல நேரங்களில் பீடி சுற்றும் பணம் அனைத்தையும் அவர்களே வாங்கி செல்கின்றனர். அந்த பெண்களுக்கு சம்பளம் போடப்படும் வார இறுதி நாளில் அங்கு சென்று அவர்களின் பணத்தை கறாராக பெற்றுச்சென்று விடுகின்றனர்.
அதே பழைய பைக் வாங்கிக் கொடுத்தாலும் அந்த பைக்கின் விலையை விட சுமார் 2 மடங்கு தொகையை அவர்களிடமிருந்து கறந்துவிடுகிறது இந்த குரூப். ஒருவேளை பணம் கட்ட முடியாத சூழலில், பைக்கை வைத்துக்கொள்ளுங்கள் என கொடுத்தால், அதையும் வாங்க மாட்டார்களாம். முழு தொகையையும் செலுத்த சொல்லி கட்டாயப்படுத்துவார்களாம்.
இதுவரை இதுதொடர்பான விழிப்புணர்வு அந்தளவிற்கு இல்லாத மக்கள், தற்போது இதுவும் கந்துவட்டியின் நவீன வடிவம்தான் என்பதை அறிந்துகொண்டு இத்தகவலை தெரிவிக்கின்றனர். இதுபோன்று பல்லாயிரம் ரூபாயை பைக்கிற்காக கொடுத்துள்ளதாக குமுறுகின்றனர் அந்த பெண்கள்.
ஏழைக் குடும்பங்களின் அறியாமையையும் அவர்களின் தேவைகளையும் அறுவடை செய்கின்றனர். இதற்குப் பெயர் பைக் பைனான்ஸ். நேரடியாக கந்துவட்டி முறையில் அல்லாமல் இதுபோன்ற மறைமுகமான முறையிலும் பணம் பார்க்கின்றனர் ஒரு குரூப் என்கின்றனர் தகவல் அறிந்தவர்கள்.
கந்துவட்டிக்கு எதிராக குரல்கள் வலுத்துள்ள இந்த நிலையில், இதுபோன்ற மறைமுகமான நவீன கந்துவட்டி முறைக்கும் முற்றுப்புள்ளி வைத்து ஏழை மக்களை காக்க வேண்டும்.