
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் மத்திய அரசு தென் மாநிலங்களை வஞ்சிக்கிறது என திமுக மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா குற்றம்சாட்டியுள்ளார்.
மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுக சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அவையின் பிற நடவடிக்கைகளை ஒத்திவைத்து தொகுதி மறுசீரமைப்பு பற்றி விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி திமுக எம்.பிக்கள் திருச்சி சிவா, வில்சன் ஆகியோர் மாநிலங்களவையில் நோட்டீஸ் அளித்தனர்.
மாநிலங்களவை துணைத் தலைவர் திமுக உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார். அவைத் தலைவரின் இந்த முடிவைக் கண்டித்து திமுக எம்.பிக்கள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதற்கு ஆதரவாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்களும் வெளிநடப்பு செய்தனர்.
பாஜக ஆளாத மாநிலங்களிலும் புதிய கல்விக்கொள்கை ஏற்கப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுகவின் மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, "மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு திட்டம் தென் மாநிலங்களின் நியாயமான பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கக்கூடியதாக உள்ளது. தென்மாநிலங்களுக்குக் கிடைக்கவேண்டிய பிரதிநிதித்துவத்தை இது பாதிக்கும். மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால், இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பையே அது பாதிப்பதாக இருக்கும். தொகுதி மறுசீரமைப்பு செய்வதாகக் கூறி தென் மாநிலங்களை மத்திய அரசு வஞ்சிக்கிறது" எனக் குற்றம்சாட்டினார்.
"மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களின் தொகுதிகளை குறைப்பதா? விகிதாச்சார அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும் என்றால், அது என்ன விகிதாச்சாரம் முறை என விளக்கம் கொடுக்க வேண்டும். உள்துறை அமைச்சர் அமித் ஷா இதற்கு நாடாளுமன்றத்தில் பதிலளிக்க வேண்டும்" என திருச்சி சிவா தெரிவித்தார்.
திமுகவின் சகுனி அமைச்சர் சேகர்பாபு! பாஜக, அண்ணாமலையை விமர்சிக்க தகுதியில்லை! சொல்வது யார் தெரியுமா?
மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறுவரையறை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதல்வரும் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் மார்ச் 5ஆம் தேதி நடைபெற்றது. தொகுதி மறுவரையறை மூலம் மக்களவைத் தொகுதிகளை இழக்கும் அபாயத்தில் உள்ள ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திங்கட்கிழமை நாடாளுமன்றம் மீண்டும் கூடுவதை முன்னிட்டு, திமுக எம்.பி.க்கள் கூட்டத்தையும் மு.க.ஸ்டாலின் கூட்டியிருந்தார். அந்தக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய தி.மு.க. எம்.பி.க்கள், மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு தென் மாநிலங்களை மட்டுமின்றி, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பிற மாநிலங்களையும் பாதிக்கும் என்றனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் பிற மாநிலக் கட்சிகளையும் இணைத்துக்கொண்டு செயல்பட திமுக அரசு முயற்சி எடுக்கிறது என்றும் கூறினர்.