
திமுக அரசு பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சேரும் நிலைப்பாட்டில் இருந்து யூ-டர்ன் அடித்தது ஏன்? என்றும் புதிய கல்விக்கொள்கையில் கையெழுத்து போடுவதைத் தடுத்த சூப்பர் முதல்வர் யார் என்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய பட்ஜெட் மீதான விவாதங்களுக்காக நாடாளுமன்ற மக்களவை 24 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் கூடியது. கேள்வி நேரத்தின்போது, திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி மறுக்கப்படுவது குறித்துப் பேசினார். அவருக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்தார்.
"தமிழ்நாடு அரசு முதலில் புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்வதாகக் கூறியிருக்கிறது. அதற்காக மாநில கல்வி அமைச்சரும் எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியனும் தன்னை வந்து சந்தித்தனர். ஆனால் கடைசி நேரத்தில் முடிவை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்" என அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
பாஜக ஆளாத மாநிலங்களிலும் புதிய கல்விக்கொள்கை ஏற்கப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்
"பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சேர்வதாகக் கூறிவிட்டு, பிறகு யூ-டர்ன் அடித்தது ஏன்? தமிழக முதல்வர் புதிய கல்விக்கொள்கையை ஏற்று கையெழுத்திட முன்வந்தார். ஆனால், திடீரென ஒரு சூப்பர் முதல்வர் வந்து அதைத் தடுத்துவிட்டார். தமிழக அரசு மாணவர்களை வஞ்சிக்கிறது. சூப்பர் முதல்வர் சொன்னதால் புதிய கல்விக்கொள்கையில் கையெழுத்திட மறுத்திருக்கிறது. அந்த சூப்பர் முதல்வர் யார்?" என்றும் மத்திய அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
"அவர்கள் நேர்மையற்றவர்கள். அவர்களுக்கு தமிழக மாணவர்களின் நலனில் அக்கறை இல்லை. அவர்கள் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்குகிறார்கள். அவர்களின் ஒரே வேலை மொழி பிரச்சினையை உருவாக்குவதுதான். அவர்கள் அரசியல் செய்கிறார்கள், குறும்பு செய்கிறார்கள். அவர்கள் ஜனநாயக விரோதிகள், அநாகரிகமானவர்கள்..." எனவும் அமைச்சர் விமர்சித்தார்.
இந்தப் பேச்சுக்கு எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்தார். பின்னர், தனது பேச்சில் அநாகரிகமானவர்கள் என்று கூறியதைத் திரும்பப் பெறுவதாக தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
தொகுதி மறுசீரமைப்பு மூலம் தென் மாநிலங்களை வஞ்சிக்கும் மத்திய அரசு: திருச்சி சிவா குற்றச்சாட்டு