ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழக பயணிகள்..! சிறப்பு ரயில் மூலம் சென்னை வந்தடைந்தனர்

By Ajmal KhanFirst Published Jun 4, 2023, 7:16 AM IST
Highlights

 ஒடிசா ரயில் விபத்தில் இருந்து மீட்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளுடன், சிறப்பு ரயில் இன்று காலை 4.30 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தது, அவர்களை தமிழக அமைச்சர்கள் சந்தித்து உடல்நலம் விசாரித்தனர். 

ஒடிசா ரயில் விபத்து- பலி 294

ஒடிசா ரயில் விபத்தில் இந்தியாவையே அதிரவைத்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 294ஆக அதிகரித்துள்ள நிலையில், காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 2 ஆம் தேதி மேற்குவங்க மாநிலம் ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் நிலையம் அருகே சென்ற சில நிமிடங்களில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயிலின் பின் பகுதியில் மோதி விபத்து ஏற்பட்டது. அதே நேரத்தில் அந்த பகுதியில் வந்த மற்றொரு ரயிலான பெங்களூருவில் இருந்து ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலின் கடைசியில் உள்ள 4 பெட்டிகளும் கோரமண்டல் ரயிலில் இருந்து சிதறிய பெட்டிகளோடு  மோதி மீண்டும் விபத்து ஏற்பட்டது. 

மீட்கப்பட்ட தமிழக பயணிகள்

இந்த விபத்தால் அந்த பகுதியே போர்களம் போல் காணப்பட்டது. எங்கு திரும்பினாலும் மனித உடல்கள் மற்றும் மனித உடல்களின் பாகங்கள் சிதறி கிடந்தது. இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருந்த பொதும் ஒரு ரயிலுக்கு மேல் ஒரு ரயில் என இருந்ததால் விபத்தில் சிக்கியவர்களை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன் பதிவு செய்யப்படாத பெட்டியில் பயணம் செய்தவர்கள் அதிகளவு உயிரிழந்தனர். இதனையடுத்து மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டதையடுத்து காயம் அடைந்தர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். உயிர் இழந்தவர்களின் உடல்களும் மீட்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தநிலையில் கோரமண்டல் ரயிலில் சென்னை வந்த பயணிகள் மீட்கப்பட்டு சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

சிறப்பு ரயிலில் சென்னை வந்தனர்

ஒடிசாவின் பதராக்-சென்ட்ரல் இடையே இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் 131 தமிழக பயணிகள் இன்று காலை 4.30 மணியளவில் சென்னைக்கு அழைத்துவரப்பட்டனர். ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்த நபர்களுக்கு சிகிச்சை வழங்க 4 மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. மேலும் ரயில் நிலையத்தில் மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டிருந்தது. சென்னை வந்த பயணிகளை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் கேகேஎஸ்எஸ்ஆர் நேரில் சென்று நலம் விசாரித்தனர். 

இதையும் படியுங்கள்

ஒடிசா விபத்து களத்தில் தமிழக அமைச்சர்கள்.. திடீரென ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குடன் சந்தி​ப்பு !!
 

click me!