Latest Videos

சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும் தேதி திடீர் மாற்றம்.!! புதிய தேதி என்ன.? தேதி மாற்றத்திற்கு காரணம் என்ன.?

By Ajmal KhanFirst Published Jun 11, 2024, 1:16 PM IST
Highlights

தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜூன் மாதம் 24ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 4 நாட்கள் முன்னதாக ஜூன் 20ஆம் தேதியே தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தமிழக சட்டப்பேரவை கூட்டம்

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டு  கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தினார். அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்க மறுப்பு தெரிவித்த ஆளுநர் 2 நிமிடங்களில் தன்னுடைய உரையை நிறைவு செய்தார். இதன் காரணமாக சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையை முழுமையாக வாசித்தார். இதனால் தமிழக சட்டப்பேரவையில் பரபரப்பான சூழல் நிலவியது. இறுதியாக  கூட்டத்தில் இருந்து வெளியேறி தனது எதிர்ப்பை ஆளுநர் பதிவு செய்தார். இதனை தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதங்கள் நடைபெற்றது. தமிழக பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.

DMK : அமைச்சர் செஞ்சி மஸ்தான் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து திடீர் நீக்கம்.! - காரணம் என்ன தெரியுமா.?

மானிய கோரிக்கை கூட்டம்

அதேபோல வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டு விவாதங்கள் நடைபெற்றது. அப்போது மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கும் சூழல் உருவானதால் சட்டப்பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து மானிய கோரிக்கை தாக்கல் செய்ய சட்டப்பேரவை கூட்டத்தை ஜூன் 24ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் திடீரென விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வருகிற ஜூலை 10ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் 10 நாட்களில் தொடங்கப்படவுள்ளது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பணிகளில் ஈடுபடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தேதி மாற்றம் காரணம் என்ன.?

இதனை கருத்தில் கொண்டு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை முன்னதாக அதாவது ஜூன் 24ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 20ஆம் தேதி நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் மானிய கோரிக்கை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது, விக்கிரவாண்டி தேர்தல் முடிந்த பின்னர் நடத்தலாமா என்பது தொடர்பாக சபாநாயகர் தலைமையில் நாளை நடைபெறும் கூட்டத்தில் ஆலோசித்து அறிவிக்கப்படும் என தெரிகிறது.  முதல் நாள் கூட்டம் மட்டும் நடத்தப்பட்ட பின்னர் தேர்தலுக்கு பின்னர் அதாவது ஜூலை 2வது வாரத்தில் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

TN Assembly : வெற்றி பெற்ற கையோடு தமிழக சட்டப்பேரவை கூட்டத்திற்கு தேதி குறித்த ஸ்டாலின்.!!எந்த தேதி தெரியுமா.?
 

click me!