
தமிழ்நாட்டை சர்வதேசமும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் ஊர் ஊட்டி. உலகத்தில் எந்த மூலையை சேர்ந்த மனிதனும் தெரிந்து வைத்திருக்கும் சுற்றுலா பிரதேசம் இது. இங்கே வாழும் மற்றும் சுற்றுலாவுக்கு வரும் மக்களின் தேவைகளை அலசி ஆராய்ந்து பூர்த்தி செய்ய வேண்டிய பணிகள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. ஆனால் அதையெல்லாம் விடுத்து, ஊட்டி அடங்கும் நீலகிரி மாவட்ட போலீஸ் போட்டிருக்கும் சாலை விதிகள் மக்களை கடுப்பில் கதறவிட்டிருக்கின்றனவாம். அந்த மாவட்டத்தினுள் போலீஸ் சொல்லியிருக்கும் வேகத்தில்தான் வாகனங்களை இயக்க வேண்டும் என்றும், மீறினால் அபராதம் போட்டு தீட்டப்படும் என்று சூழ்நிலை போய்க் கொண்டிருக்கிறதாம்.
என்ன விதிமுறைகள் அவை?
அதாவது நீலகிரி மாவட்டத்தில் டூவீலர் மற்றும் ஃபோர்வீலர் வாகனங்கள் செல்ல வேண்டிய வேகத்தின் அளவுகள் இதோ...
தேசிய நெடுஞ்சாலை - மணிக்கு 35 கி.மீ வேகம்.
மாநில நெடுஞ்சாலை - மணிக்கு 35 கி.மீ.வேகம்.
தலைகுந்தா - மசினகுடி சாலை- மணிக்கு 20 கி.மீ. வேகம்.
முக்கிய மாவட்ட சாலைகள் - மணிக்கு 30 கி.மீ. வேகம்.
ஊட்டி, குன்னூர், கூடலூர் நகராட்சி
சாலைகள் - மணிக்கு 20 கி.மீ. வேகம்.
கொண்டை ஊசி வளைவுகள் - மணிக்கு 15 கி.மீ. வேகம்.
இவைதான் அந்த வேக விதிமுறைகள்.
இந்த உத்தரவை பார்த்துத்தான் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த வாகன ஓட்டிகளும், சுற்றுலா செல்லும் நபர்களும் நொந்து நூடுல்ஸாவதுடன், அதிரடி வளைவுகளில் வண்டியின் வேகத்தை விதி முறைகளில் உள்ளபடி மெயிண்டெயின் பண்ண முடியாமல் போய் அபராதத்தில் சிக்கி அவஸ்தைப்படுகிறார்களாம்.
ஆனால் போலீஸோ ‘பாதுகாப்பான பயணத்துக்காகத்தான் இந்த விதிமுறைகளே. இதை கடைப்பிடிக்க வேண்டியது மக்களின் கடமை.’ என்று கண்டிஷனாக பேசுகிறார்களாம்.
ஹூம்! எவ்வளவு நாள் என்று பார்க்கலாம், என ஆதங்கம் பொங்குகிறார்கள் மக்கள்.