
Free Sewing Machines To Tamilnadu Women: தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக மகளிர் வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில், எண்ணிலடங்கா திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றது.
சிறுபான்மையின பெண்களுக்கு உதவி
தமிழ்நாட்டில் கிறித்துவ சமுதாயத்தை சார்ந்த பின்தங்கிய நிலையில் உள்ள ஆதரவற்ற கணவனால் கைவிடப்பட்ட மற்றும் வயதான கிறித்துவ மகளிர்களுக்கு உதவும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கிறித்துவ மகளிர் உதவும் சங்கம், இஸ்லாமியர் சமுதாயத்தை சார்ந்த பின்தங்கிய நிலையில் உள்ள ஆதரவற்ற கணவனால் கைவிடப்பட்ட மற்றும் வயதான முஸ்லிம் மகளிர்களுக்கு உதவும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குறைந்த வட்டியில் குழுக்கடன் வழங்கும் திட்டம்
இச்சங்களுக்கு உதவித்தொகையாக ஒவ்வொரு சங்கத்திற்கும் தலா ரூ.1,00,000 வழங்கப்படுகிறது. மேலும், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் சமூக, பொருளாதார மற்றும் கல்வி ஆகிய நிலைகளில் முன்னேற்றத்தை அடைவதற்கான உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரியம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகத்தின் மூலம் குறைந்த வட்டியில் குழுக்கடன் வழங்கும் திட்டம், ஹஜ் பயணிகளுக்கு அரசின் மானியம் வழங்கும் திட்டம், ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள அரசு நிதி உதவி தனிநபர் கடன் திட்டம்,
இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம்
பித்தளை சலவைப் பெட்டிகள் வழங்குதல், இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம், வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்குதல், கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம், கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள அரசு நிதி உதவி வழங்குதல் என எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தையல் இயந்திரம் இலவசம்
அந்த வகையில் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலமாக மகளிர் வாழ்வாதாரத்தை பெருக்கிடும் வகையில், இலவச மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம் கோரும் பயனாளிகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 15 நாட்கள் இலவச தையற்பயிற்சி வழங்கப்பட்டு அவர்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்? யார்?
இதேபோல் சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் பெண்களின் வயது 20 முதல் 40 வரை இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ₹72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதரவற்ற பெண்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள் ஆகியோர் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் தையல் கலையை நன்கு அறிந்திருக்க வேண்டும். ஏற்கனவே வேறு ஏதேனும் அரசு திட்டத்தின் மூலம் இலவச தையல் இயந்திரம் பெற்றவராக இருக்கக்கூடாது.
எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?
இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட சமூக நல அலுவலகத்தையோ அல்லது இ-சேவை மையங்களையோ அணுகி விண்ணப்பப் படிவத்தைப் பெற்று விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ், வயதுச் சான்றிதழ், தையல் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ், விண்ணப்பதாரரின் புகைப்படம் தேவைப்பட்டால் சாதி சான்றிதழ் ஆகியவை விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் ஆகும்.