கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவி வரும் நிலையில், தமிழக அரசு சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் குட்டநாடு, எடத்துவா, சிறுதானா பகுதிகளில் உள்ள உள்ள வாத்து பண்ணைகளில் ஏராளமான வாத்துகள் கடந்த வாரம் உயிரிழந்தன. இறந்த வாத்துகளின் மாதிரிகளை, சுகாதாரத்துறையினர் சேகரித்து சோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதில், இறந்த வாத்துகளுக்கு எச்5என்1 என்ற பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அப்பகுதிகளில் வளர்க்கப்படும் வாத்துகள், கோழிகள் உள்ளிட்ட பறவை இனங்கள் கொல்லப்பட்டு வருகின்றன. அப்பகுதிகளில் இருந்து வாத்து மற்றும் கோழிகளை வெளியே எடுத்துச்செல்லவும், இறைச்சி மற்றும் முட்டைகளை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பறவைக் காய்ச்சலை தடுக்கும் நடவடிக்கைகளில் கேரள மாநில கால்நடை பராமரிப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கேரளாவில் பறவைக்காய்ச்சல் எதிரொலியாக தமிழக அரசு சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கேரளாவை ஒட்டியுள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள் வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. தீவிர கண்காணிப்புக்கு பிறகே தமிழ்நாட்டுக்குள் அவை அனுமதிக்கப்படுகின்றன.
தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி, கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடி, தேனி சோதனை சாவடி, கோவை மாவட்டம் வாளையார் சோதனைச் சாவடிகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது. வாத்து, கோழி, முட்டை, கோழித் தீவனங்களுடன் வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. அனைத்து கனரக, இலகுரக வாகனங்களையும் தடுத்து நிறுத்தி சோதனையிட்டு வாகனங்களின் டயர்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பறவை காய்ச்சல் நோய் கிருமிகளை அழிக்கும் வகையில், கிருமி நாசினி (க்ளோரின்-டை-ஆக்சைடு) மருந்தினை தெளித்து நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
ரூ.4 கோடி பறிமுதல்: ஆஜராக அவகாசம் கோரிய பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன்!
சோதனைச் சாவடி வழியாக வரும் அனைத்து வாகனங்களும் கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பிறகே தமிழ்நாட்டுக்குள் அனுப்பப்படுகின்றன. ஒரு கால்நடை உதவி ஆய்வாளர், ஒரு கால்நடை பராமரிப்பு உதவியாளர், கிருமி நாசினி தெளிப்பவர்கள் இருவர் என மொத்தம் 4 பேர் கொண்ட குழுவினர் 24 மணி நேரமும் 2 ஷிப்டுகளாக சோதனை சாவடிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
அதேபொல், கேரளாவில் பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும், மாநிலம் முழுவதும் உள்ள கோழிப் பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுதவிர, கோழிப்பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய மாதிரிகளும் எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.