
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் அமைந்துள்ள மதுக்கடைகளை கடந்த மார்ச் 31-ஆம் தேதிக்குள் மூடவேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, தமிழகத்தில் 2,800 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. மேலும் 1,183 மதுக்கடைகள் வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டன.
நகராட்சி சாலைகளாக...
இந்நிலையில், சண்டிகர் அரசு தனது எல்லைக்குள் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை மாநகராட்சி மற்றும் நகராட்சி சாலைகளாக மாற்றி, மதுக் கடைகளைத் திறந்தது.
இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை மாநகராட்சி மற்றும் நகராட்சி சாலைகளாக மாற்றியது சரியானது எனத் தெரிவித்தது.
மேலும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை நகராட்சி சாலைகளாக மாற்றாவிட்டாலும் மதுக் கடைகளை திறக்கலாம் என தெரிவித்திருந்தது.
தமிழகம் மனு
இந்நிலையில், இந்த உத்தரவு தமிழகத்திற்கு பொருந்துமா என்று விளக்கம் கேட்டு தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விரைவாக விசாரிக்கக் கோரி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன் தமிழக அரசு வழக்குரைஞர் யோகேஷ் கண்ணா முறையிட்டார்.
20-ந்தேதிக்குள்
இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி, நவம்பர் 20- ஆம் தேதிக்குள் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார்.