
கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் விளையாட்டு இந்தியாவில் வேரூன்றி அசூர வளர்ச்சி பெற்றது. நாட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் ஆன்லைன் கேம் விளையாடுவோரின் எண்ணிக்கை 170% அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. 2021- 22 ஆம் நிதி ஆண்டில் மேலும் 28% உயர்ந்துள்ளது.
இதனிடையே கடந்த ஆண்டு ஆன்லைன் விளையாட்டு வர்த்தகத்தின் வருவாய் ரூ10,100 கோடி என அகில இந்திய கேமிங் சம்மேளனம் எனும் ஃபிக்கி தெரிவித்து உள்ளது. அதேபோல், வரும் 2023ஆம் ஆண்டு ஆன்லைன் விளையாட்டு வர்த்தகத்தின் வருவாய் ரூ20,000 கோடியாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஆன்லைன் விளையாட்டினால் பணத்தை இழந்து, கடன் தொல்லையினால் தற்கொலை செய்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிலர் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி அதில் இருந்து மீள முடியாமல் சிக்கி தவிக்கிறார்கள்.
இந்நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்து டிஜிபி சைலேந்திர பாபு பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: சமீபகாலமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டு எனும் மோசடி அதிகளவில் நடந்து வருகிறது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டு முதலில் ஜெயிப்பது போல ஆசையை தூண்டிவிட்டு, பின்பு அனைத்து பணத்தையும் இழக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பிடித்த நடிகர்கள் ரம்மி விளையாட்டு விளம்பரங்களில் வருவதை பார்த்து ஏமாந்து யாரும் இந்த மோசடியில் சிக்க வேண்டாம். இது ஆன்லைன் ரம்மி அல்ல; மோசடி ரம்மி. ஆன்லைன் ரம்மி விளையாடும் நபர்களுக்கு அவமானம், குடும்பப் பிரச்னை மற்றும் தற்கொலை செய்துகொள்ளும் நிலை ஏற்படும்.
எனவே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் யாரும் ஈடுபட வேண்டாம். இந்த காணொளியை பார்த்த பின்னரும் இந்த ஆன்லைன் ரம்மி விளையாடினால் அது மிக பெரிய தவறை செய்வதாகும்.யாருடைய பணத்தை உங்களுக்கு தர மாட்டார்கள். யாரும் அவ்வளவு அதிகமாக சம்மாதிக்கவில்லை. எனவே பண ஆசை காட்டி மோசடி செய்யும் செயல் இது. இதுவெல்லாம் ஆன்லைன் விளையாட்டு இல்லை ஆன்லைன் மோசடி என்று அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: பேனா வடிவத்தில் கருணாநிதி நினைவிடம்...! விரைவாக நடைபெற்று வரும் பணிகள்... ஸ்டாலின் கூறிய புதிய தகவல்