தமிழகத்தில் பாரபட்சம் காட்டும் பிஜேபி அரசு - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி குற்றச்சாட்டு

By Dinesh TGFirst Published Sep 1, 2022, 12:10 PM IST
Highlights

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் யாத்திரை கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபெற உள்ளது. இதற்கான முனேற்ப்பாடுகள் குறித்து காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
 

மத்தியில் ஆளும் பிஜேபி அரசைக் கண்டித்து, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத் யாத்திரையை ராகுல் காந்தி மேற்கொள்ள உள்ளார். இதற்காக செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வரும் ராகுல் காந்தி, காந்தி, காமராஜர் மண்டபங்களில் அஞ்சலி செலுத்தி விட்டு அங்கிருந்து சுமார் 3 கி.மீ. தூரம் நடக்கிறார். அவரின் பாத யாத்திரையானது மொத்தம் 3,500 கி.மீ. தூரம் 150 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த பாத யாத்திரை செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்குகிறது.

இதையொட்டி, ராகுல்காந்தியின் பாரத் யாத்திரை வெற்றி பயணத்தின் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சி அரிஸ்டோ ரவுண்டானாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கேஎஸ் அழகிரி,

ராகுல்காந்தியின் நடைப்பயணம் 150 நாட்கள் நடைபெற உள்ளதாகவும், இந்தியாவின் ஒற்றுமைக்கு மக்களிடையே இருக்கும் நல்லிணக்கத்தை பாதுகாப்பதற்காக அவர் இந்த நடைபயணத்தை மேற்கொள்கிறார் என்றார். மேலும், இந்தியாவின் பொருளாதாரம் வரலாறு காணாத அளவில் சரிந்துள்ளதாகவும், பிரதமர் நரேந்திர மோடியின் தவறான பொருளாதார கொள்கையால் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

கருப்பு பணத்தை மீட்பேன், விவசாயத்தை காப்பேன் என கூறியவர் யார் என்ன சாப்பிட வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டுப்படுத்துவதாக கூறினார். நாட்டில் அரிசியையும், கோதுமையும் தான் ஏழை மக்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். அதற்கு 5% ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளார்கள். ஆனால் யாரும் பாதிக்கப்படவில்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் கூறுகிறார். சர்வாதிகார பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது. பாரபட்சம் காட்டப்படுகிறது என்றார்.

india gdp: இந்தியாவின் பொருளாதாரம் 13.5% வளர்ச்சி: ஏப்ரல்-ஜூன் முதல் காலாண்டு முடிவு அறிவிப்பு

திமுக ஆட்சி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழ்நாட்டில் தி.மு.க. சிறப்பாக ஆட்சி நடத்துகிறது. ஒரு அரசால் என்ன செய்ய முடியுமோ அதை சிறப்பாக செய்கிறார்கள். ஆங்காங்கே இருக்கும் குறைகளை சுட்டிக்காட்டினால் அதை சரி செய்து கொள்கிறார்கள். மோடியின் விவசாய காப்பீட்டு திட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதி விவசாயிகள் மட்டுமே பலன்களை அனுபவிக்கிறார்கள். சென்னையில் 2வது விமான நிலையம் வர வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டியது அரசு தான். விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தும் போது குறைந்தபட்சம் 20 மடங்கு அதிகமாக இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது, முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர் எம்.பி. மற்றும் பலர் பங்கேற்றனர்.

click me!