நேற்று ஆகஸ்ட் 25ம் தேதி தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் விரிவாக்கத் திட்டத்தை துவக்கி வைத்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள். திருக்குவளையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பயின்ற பள்ளியில் இந்த நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அந்த நிகழ்வில் பங்கேற்று பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், தான் தமிழக முதல்வராக பொறுப்பேற்று பல திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும், இந்த காலை உணவு திட்டம் தான் தனக்கு பெரிய மன நிறைவை தருகிறது என்று கூறினார். மற்றும் அவர் அறிமுகம் செய்த பல்வேறு நலத்திட்ட உதவிகள் குறித்து அவர் பேசினார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் துவங்கியுள்ள இந்த அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான காலை உணவு விரிவாக்க திட்டத்தை பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து மக்கள் நீதி மைய கட்சியின் தலைவரும், நடிகருமான திரு. கமல்ஹாசன் அவர்கள் வெளியிட்ட தனது ட்விட்டர் பதிவில் பின்வருமாறு கூறியுள்ளார்.
"இந்திய மாநிலங்களிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 17 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெற இருக்கிறார்கள். இதனால் வரும்கால தலைமுறை மாணவர்கள் பசியின்றி படித்து முன்னேற முடியும்".
"இந்தச் சாதனையைச் சாத்தியமாக்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பாரம்பரிய நெல் ரகங்களையும், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்களையும், நாட்டு ரக பழவர்க்கங்களையும் சாகுபடி செய்யும் தமிழக விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து இத்திட்டத்தில் பயன்படுத்தினால் மாணவர்களுக்குச் சத்தான சுவையான உணவும் கிடைக்கும்".
"விவசாயிகளின் நலன்களும் பாதுகாக்கப்படும். இதன் மூலம் பாரம்பரிய நெல் வகைகளும், தானியங்களும் பாதுகாக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டில் அதிகம் இடம்பெறவும் வாய்ப்புண்டு. இதன் சாத்தியங்களையும் தமிழக அரசு ஆராய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் தனது பதிவில் கூறியிருந்தார்.
பாஜக முழு பைத்தியம் என்றால், திமுக அரை பைத்தியம் - சீமான் விமர்சனம்