சூப்பர் அறிவிப்பு.. மாணவிகளுக்கு மட்டுமல்ல... இனி மாணவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் - பட்ஜெட்டில் அதிரடி

By Ajmal Khan  |  First Published Feb 19, 2024, 1:55 PM IST

மாணவிகளுக்கு உயர்கல்விக்கு உதவிடும் வகையில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதை போல் இனி தமிழ்ப் புதல்வன் என்ற திட்டத்தின் கீழ் உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 


'தமிழ்ப் புதல்வன்'

தமிழக நிதி நிலை அறிக்கையில்,  உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம் பெண்களின் உயர்கல்வியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், அரசுப் பள்ளிகளில் பயின்ற, ஏழை எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும் அரசுப் பள்ளி மாணவரின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திடவும் 'தமிழ்ப் புதல்வன்' எனும் ஒரு மாபெரும் திட்டம் வரும் நிதியாண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்படும்.

Tap to resize

Latest Videos

undefined

இத்திட்டத்தின் கீழ்,6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்கள் பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். 

மாணவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய்

இத்தகைய முன்னோடித் திட்டங்களின் மூலம் நமது இளைஞர்களின் ஆற்றலை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி அவர்கள் நமது மாநிலம் மற்றும் நாட்டின் எதிர்காலத் தூண்களாகத் திகழ்வார்கள். இப்புதிய திட்டத்தின் மூலம் சுமார் மூன்று இலட்சம் கல்லூரி மாணவர்கள் பயனடைவர். உயரிய நோக்கம் கொண்ட இத்திட்டத்தை நிறைவேற்றிட வரும் நிதியாண்டில் 360 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்லூரிக் கனவை நனவாக்கிடவும், அவர்தம் பெற்றோரின் நிதிச்சுமையைப் பகிர்ந்து கொள்ளும் வகையிலும், தேவையின் அடிப்படையில் 2024-25 ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் கல்லூரி மாணவர்களுக்கு 2,500 கோடி ரூபாய் அளவிற்கு, பல்வேறு வங்கிகள்  கல்விக்கடன் வழங்கிடுவதை அரசு உறுதி செய்திடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


விளையாட்டு பயிற்சி மையம்

அடுத்ததாக விளையாட்டுப் போட்டிகளின் தலைமையகமாக தமிழ்நாட்டை மாற்றிடவும் இலட்சிய வேட்கையுடன் ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர்களை உருவாக்கிட, சென்னை, மதுரை, திருச்சி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நான்கு ஒலிம்பிக் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். இப்பயிற்சி மையங்கள் இறகுப்பந்து, கையுந்து பந்து, கூடைப்பந்து, தடகளம் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உலகத்தரமிக்க பயிற்சிகளை வழங்குவதுடன் விளையாட்டு அறிவியலுக்கான மையங்களாகவும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

தமிழக பட்ஜெட்டை 2 மணி நேரம் 7 நிமிடம் வாசித்து நிறைவு செய்த தங்கம் தென்னரசு.!புதிய அறிவிப்புகள் என்ன தெரியுமா?

click me!