
காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு மத்திய வங்க கடல் முதல் கன்னியாக்குமரி கடல் வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது.
இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன், மேற்கு மத்திய வங்க கடல் முதல் கன்னியாக்குமரி கடல் வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் சில இடங்களில் கனமழை இருக்கும் என்றும் சென்னையை பொறுத்த வரை வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்தார்.
இன்று மாலை அல்லது இரவில் மிதமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகட்சமாக திருச்சியில் 8 சென்டிமீட்டர் மழையும், ஆலங்குடி, திருப்புவனத்தில் தலா 7 சென்டிமீட்டரும், கரூர், பர்கூர், ஏற்காட்டில் தலா 6 சென்டிமீட்டரும் ஓமலூர், குடியாத்தம், ராசிபுரம், ராயக்கோட்டையில் தலா 5 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.