குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுங்கள்! - மக்கள், ஆட்சியரிடம் கோரிக்கை மனு...

First Published Apr 25, 2018, 8:18 AM IST
Highlights
Take action to get rid of drinking water shortages! - People petition to the collector


நாமக்கல்
 
நாமக்கல்லில், முறைகேடான குடிநீர் இணைப்பை துண்டித்துவிட்டு, நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள், ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே உள்ள நல்லூரை அடுத்த காளியப்பனூரைச் சேர்ந்த மக்கள் நேற்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று திரண்டு வந்தனர். அங்கு நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். 

அந்த மனுவில், "நாங்கள் விவசாய கூலி வேலை செய்து வருகிறோம். எங்கள் ஊரில் உள்ள அருந்ததியர் காலனியில் பொது குடிநீர் குழாய் உள்ளது. இதில் இருந்து குழாய் மூலம் நாங்கள் குடிநீர் பெற்று வருகிறோம்.

இந்த சூழ்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த காவலர் ஒருவர் குழாயில் இணைப்பு ஏற்படுத்திக் கொண்டு, தன் வீட்டில் உள்ள பூச்செடிகள், வாழைமரம் போன்றவற்றிற்கு தண்ணீர் பாய்ச்சி வருகிறார். 

இதனால் எங்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நாங்கள் குடிநீர் கிடைக்காமல் திண்டாடி வருகிறோம்.

இதுகுறித்து நல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் போனால், சம்பந்தப்பட்ட நபர் காவலராக இருப்பதால், எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. மேலும, கடந்த ஒரு வாரமாக எங்கள் பகுதியில் குடிநீர் விநியோகிக்காமல் இருந்து வருகிறார்கள். 

இதனால், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு, நாங்கள் பல இடங்களுக்கு சென்று குடிநீர் சேகரித்து வருகிறோம். எனவே, அந்த காவலரின் முறைகேடான குடிநீர் இணைப்பை துண்டித்துவிட்டு எங்கள் பகுதியில் நிலவிவரும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறி இருந்தனர்.  
 

click me!