
தமிழக அரசு ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்த கொண்டு வந்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த ஆதலால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நிரந்தர போட்டி
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நிரந்தரமாக நடத்தும் வகையில் தமிழக அரசு சட்டத்திருத்த மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. இதேபோல் கர்நாடகாவில் பாரம்பரியமாக நடத்தப்படும் கம்பளா எனப்படும், எருது பந்தயத்தை தடையின்றி நடத்துவதற்காகவும் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
எதிராக மனு
இந்த சட்டங்களை எதிர்த்து விலங்குகள் நல வாரியம், இந்திய விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு(எப்.ஐ.ஏ.பி.ஓ.), ‘கூபா’(சி.யு.பி.ஏ.) உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ரோஹின்டன் நாரிமன் ஆகியோர் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
சட்டம் செல்லாது
அப்போது, மனு தாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சித்தார்த் லூத்ரா, ஆனந்த் குரோவர், வி.கிரி, ஷியாம் திவான் ஆகியோர் ஆஜரானார்கள். இவர் வாதிடுகையில், “ தமிழக அரசு கொண்டு வந்த ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கான சட்டத்திருத்தம் என்பது செல்லாது.
தீர்ப்புக்கு எதிரானது
கடந்த 2014ம் ஆண்டு ஜல்லிக்கட்டு தடை தீர்ப்பின் அடிப்படை அம்சங்களை பார்க்காமல் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு மட்டுமே சட்டவிதிமுறைகளை வகுக்க அதிகாரம் உண்டு, மாநில அரசுக்கு கிடையாது. தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திருத்தம் செல்லாதது. 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிரானது’’ என வாதிட்டனர்.
கலாச்சார உரிமை
தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகல் ரோத்தகி வாதிடுகையில், “ ஜல்லிக்கட்டு தொடர்பான சட்டத்திருத்தம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்றது. ஆதலால், இடைக்கால தடைவிதிக்க முடியாது. அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 29(1) ன்கீழ் ஜல்லிக்கட்டு விளையாட்டு என்பது தமிழகத்தின் பாரம்பரிய, கலாச்சார உரிைமயாகும். விலங்குகள் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் இருந்து ஜல்லிக்கட்டு நீக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு என்பது, கொடூரமானது இல்லை. ஜல்லிக்கட்டு விளையாட்டில் மாடுகளின் கண்களில் மிளகாய் பொடி தூவுதல், ஆயுதங்களால் காயப்படுத்துதல், மது குடிக்கவைத்தல் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
2500 ஆண்டுகள்
தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் காளை மாடுகள் புனிதமாக பார்க்கப்படுகிறது. அதற்கு பெயரிட்டு, குழந்தைபோல் வளர்க்கப்படுகிறது. கடந்த 2500 ஆண்டுகளாக பின்பற்றப்படும், விளையாடப்படும் இந்த விளையாட்டுக்கு பாதுகாப்புக்காக எந்த சட்டமும் கூட வகுக்கப்படவில்லை’’ என வாதிட்டார்.
சட்டப்பாதுகாப்பு
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி நாரிமன், “ அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 29ன்படி, நாட்டின் எந்த பகுதியில் வசிக்கும் குடிமகனும்,தனது மொழி, கலாச்சாரத்தை,பாரம்பரியத்தை பாதுகாக்க உரிமைஉண்டு. தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டம், மஹாராஷ்டிராவின் மாட்டுவண்டிப் பந்தயம் சட்டம் ஆகியவற்றுக்கு சட்டப்பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தடைவிதிக்க முடியாது
அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 29ன்கீழ் பாரம்பரிய மற்றும் கலாச்சார உரிமையைக் பாதுகாக்கும் பொருட்டு ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு சட்டப்பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதால், அந்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது. இந்த மனுக்களை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுகிறோம்’’ என உத்தரவிட்டனர்.
மாற்றம்
எனவே, இனி அரசியல் சாசன அமர்வு இவ்வழக்கை விசாரிக்கும். அதே சமயம், ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டனர். எனவே, ஜல்லிக்கட்டு போட்டியை தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் இருக்காது எனத் தெரிகிறது.